கொட்டாஞ்சேனையில் கர்ப்பிணிப் பெண் உட்பட , இருவரை கடத்திச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு : கடத்தல்காரன் தப்பி ஓட்டம்!

கர்ப்பிணிப் பெண் உட்பட 2 பெண்களுடன் கடத்தப்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி நிறுத்தினர்… இரு பெண்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை…
நேற்று (12) கொட்டாஞ்சேனையில் கட்டளையை மீறிச் சென்றபோது கர்ப்பிணிப் பெண் உட்பட இரு பெண்களுடன் கடத்திச் செல்லப்பட்ட வாகனம் ஒன்றை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி நிறுத்தியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாசல் வீதி, கொட்டாஞ்சேனை வீதி பகுதியில் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் தாயாருடன் காரில் வந்த ஒருவர், காரின் எஞ்சின் இயங்கிக் கொண்டிருந்தபோதே , அப்படியே காரை விட்டு விட்டு , உணவு வாங்க காரில் இருந்து இறங்கி கொட்டாஞ்சேனை வீதியில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில், குறித்த நபர் காரின் உரிமையாளரின் மனைவி மற்றும் தாய் காரில் இருந்தபோதே இயங்கிக் கொண்டிருந்த காரை திருடிச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில், விசாரணைக்காக டாக்சியில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு வந்த மட்டக்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு இந்த கார் திருடப்பட்டது தொடர்பான தகவல் கிடைத்ததும் , உடனடியாக செயற்பட்டு தப்பிச் சென்ற காரை துரத்திச் சென்று நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
ஆனால் சந்தேக நபர் பொலிஸ் கட்டளையை மீறி காரை தொடர்ந்து ஓட்டியுள்ளார். பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைத் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் ரயில் பாதை அருகே காரை நிறுத்த முடிந்தது.
அதிகாரிகள் காரை நெருங்கியபோது சந்தேக நபர் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். காரில் இருந்த இரு பெண்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய சந்தேக நபரை கைது செய்வதற்காக கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.