இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வு காட்டுவோர்மீது நடவடிக்கை: அமெரிக்க மாநிலத்தில் சட்ட மசோதா அறிமுகம்

அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்க வகைசெய்யும் சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ள முதல் மாநிலமாக ஜார்ஜியா விளங்குகிறது.
அது சட்டமாக இயற்றப்பட்டால், ஜார்ஜியா அதன் குற்றவியல் தண்டனைச் சட்டத்தைப் புதுப்பிக்கும். அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வு காட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடிக்காட்டியுள்ள வேளையில் இந்த மசோதா அறிமுகம் கண்டுள்ளது.
ஜார்ஜியா சட்டமன்றத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் இருதரப்பையும் சேர்ந்த நால்வர் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தனர்.
2023 ஏப்ரலில் ஜார்ஜியா சட்டமன்றம், இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.
2023-24 பியூ ஆய்வு நிலைய சமய நிலவர ஆய்வின்படி, அமெரிக்க மக்கள்தொகையில் இந்துக்கள் ஏறத்தாழ 0.9 விழுக்காடு (2.5 மில்லியன்) அங்கம் வகிக்கின்றனர்.
ஜார்ஜியாவில் மட்டும் 40,000க்கும் அதிகமான இந்துக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அட்லான்டாவிலும் அதைச் சுற்றியும் வசிக்கின்றனர்.