8 நாட்களுக்கு சூரிய மின் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு மின்சார சபை கோரிக்கை!

மின்சார கட்டமைப்பு ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தியை , தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை சூரிய மின் தகடுகள் பொருத்தியுள்ள மின்சக்தி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, 13ம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி வரை பகல் வேளையில் தினமும் பிற்பகல் 3.00 மணி வரை தங்கள் சூரிய மின் அமைப்புகளை செயலிழக்கச் செய்யுமாறு மின்சார சபை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வருடப் பிறப்புக் காலத்தில் மின்சார தேவை மிகக் குறைந்த மட்டத்திற்கு குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்படும் அதிக மாறுபாடுடைய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி பங்களிப்பு தேசிய கட்டமைப்புக்கு அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அதன் விளைவாக கட்டமைப்பின் நிலைத்தன்மை கடுமையாக குறைந்துள்ளதாகவும், மிகச் சிறிய ஏற்ற இறக்கத்தில் கூட பகுதி நேர மின்வெட்டு அல்லது நாடு தழுவிய மின் தடை ஏற்படக்கூடிய அபாயகரமான நிலைக்கு வந்துள்ளதாகவும் மின்சார சபை கூறுகிறது.
அதன்படி, இந்த காலப்பகுதியில் தேசிய மின்சார வலையமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு மின்சார சபை தனது அறிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.