ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதுவும் 174 ரன்கள் என்ற இலக்கை 17.3 ஓவர்களிலேயே எட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 47 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஜோஷ் ஹேசல்வுட் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்திருந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 15 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
ரியான் பராக் 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துருவ் ஜூரல் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று ஆடினார். அவர் 23 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்திருந்தார். ஷிம்ரோன் ஹெட்மேயர் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். நிதிஷ் ராணா கடைசி ஒரு பந்தை சந்தித்து 4 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில் ஜோஷ் ஹேசல்வுட், யாஷ் தயாள், க்ருனால் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது.
பெங்களூர் அணிக்கு மிகச்சிறந்த துவக்கம் கிடைத்தது. பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 92 ரன்களை சேர்த்திருந்தனர். பிலிப் சால்ட் மிகவும் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். அவர் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களை அடித்திருந்தார். குமார் கார்த்திகேயா வீசிய பந்தில் அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிலிப் சால்ட் ஆட்டமிழந்தவுடன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். விராட் கோலி 45 பந்துகளில் 62 ரன்களும், தேவதத் படிக்கல் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேலும் 17.3 ஓவர்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 175 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் அனைவருமே அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருந்தனர். குமார் கார்த்திகேயா மட்டுமே ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் லீக் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. அந்த அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளையும் இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளது. மொத்தம் எட்டு புள்ளிகளுடன் 0.672 என்ற நெட் ரன் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஆண்டு இதுவரை மொத்தம் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அந்த அணி விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றது. அதன் மூலம் நான்கு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இருவருமே அரை சதம் அடித்திருந்தனர். ஆனால் பிலிப் சால்ட்டுக்கு தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் 33 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 196.97 என்பதாக இருந்தது. விராட் கோலி 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 137.78 என்பதாக இருந்தது. அதன் அடிப்படையில் பிலிப் சால்ட் அதிரடி ஆட்டம் ஆடியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வாங்கியவுடன் அவர் பேசுகையில், “வெற்றிக்காக பங்களிப்பை அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மைதானம் சற்று வித்தியாசமானது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடி எனது முத்திரையை பதித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.” “ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக இன்று நன்றாக ஆடினேன்.
ராஜஸ்தான் அணி நன்றாக விளையாடியது. ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் அவர்களின் திட்டத்தை சரியாக செயல்படுத்தினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் நல்ல ஸ்கோரை எடுத்தார்கள். ஆனால் எங்களுக்கு பேட்டிங்கில் இன்று எல்லாம் சரியாக அமைந்தது” என்றார் பிலிப் சால்ட். பிலிப் சால்ட் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் 208 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் இன்று அடித்த 65 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அவர் இடம்பெற்றதற்கு பிறகு முதல் முறையாக ஆட்டநாயகன் விருதையும் வென்று இருக்கிறார். அவர் இந்த ஆண்டு இதுவரை இரண்டு அரை சதங்களை அடித்து இருக்கிறார்.