வக்ஃபு வாரியம் சட்ட திருத்தத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

வக்ஃபு வாரியம் சட்ட திருத்தத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இஸ்லாமியர்கள் தானமாக வழங்கும் சொத்துகளை நிர்வகிப்பதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃபு வாரியம் செயல்பட்டு வருகிறது.
இந்த வக்ஃபு வாரியத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ள இந்திய அரசு, கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், திருத்தப்பட்ட வக்ஃபு மசோதா சட்டமாக மாறியது.
இதனையடுத்து நாட்டிலே முதல் மாநிலமாக புதிய சட்டதிருத்தத்தின் அடிப்படையில், கேரளா வக்ஃபு வாரியத்தை அமைத்தது.
இந்த சட்டதிருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டதிருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து அவரது கட்சியினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.