பெல்ஜிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி

தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை பெல்ஜியம் போலீசார் கைது செய்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைதாகியிருக்கும் மெஹுல் சோக்ஸியை பெல்ஜியத்தில் இருந்து நாடுகடத்துவதற்கான பணியை சிபிஐ மேற்கொண்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த தொழிலதிபா்கள் நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.
லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நாடுகடத்துவதற்கான பணியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்த மெஹுல் சோக்ஸியை கைது செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்ற சோக்ஸியை, மும்பை நீதிமன்றத்தின் இரண்டு கைதாணைகளின் அடிப்படையில் அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சோக்ஸி, பெல்ஜியம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி, உடனடியாக பிணை பெறுவதற்கான நடவடிக்கைகளை சோக்ஸி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாக அவரை நாடுகடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தியாவில் இருந்த நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸியின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இருவருக்கு எதிராகவும் மோசடி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.