ஆந்திராவில் சோகம்: பட்டாசு ஆலை தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

ஆந்திரத்தின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் அமைந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா்.
அனகாப்பள்ளி மாவட்டத்தின் கோடவுரத்லா கிராமத்தில் அரசு உரிமம் பெற்ற பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. சம்பவம் நிகழ்ந்த ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் ஆலையில் 15 ஊழியா்கள் பணியில் இருந்தனா்.
தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினா், காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இறந்தவா்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
காயமடைந்தவா்களில் 2 போ் கவலைக்கிடமான நிலையில் விசாகப்பட்டினம் மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மீட்புப்பணியில் உள்ளூா் மக்களும் உதவி செய்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்த விபத்துக்கு பிரதமா் மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘ஆந்திர பட்டாசு ஆலையில் நடைபெற்ற பட்டாசு விபத்தில் மக்கள் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமடைந்தேன். காயமடைந்தவா்கள் விரைவில் நலம்பெற பிராா்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவா்களுக்கு உள்ளூா் நிா்வாகம் உதவி வருகிறது.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்’ எனக் குறிப்பிட்டாா்.
விசாரணைக்கு உத்தரவு: தீ விபத்துக்கு ஆந்திர ஆளுநா் எஸ்.அப்துல் நசீா், முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனா்.
காயமடைந்தவா்களுக்கு முறையான மருத்துவ வசதியை உறுதி செய்யுமாறு மாநில உள்துறை அமைச்சா் அனிதா மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதல்வா் சந்திரபாபு நாயுடு, இந்த விபத்து தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, அறிக்கை சமா்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
தீ விபத்தில் இறந்தவா்களுக்கு இரங்கல் கூறிய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவா் ஜெகன்மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.