அதிர்ச்சியை ஏற்படுத்திய வைரல் வீடியோ: சொத்துக்காக தந்தையை கட்டிவைத்து கொடூர தாக்குதல்

சொத்துக்காக முதியவரை மனைவி, மகன்கள் கை, கால்களை கட்டி வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (70). இவருக்கும், இவரது மனைவி மற்றும் மகன்களுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் சொத்து தகராறு முற்றிய நிலையில், மனைவி மற்றும் மகன்கள் சேர்ந்து அங்குள்ள ஒரு தோட்டத்தில் குப்புசாமி கை, கால்களைக் கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் அவர் பலத்த காயம் அடைந்தார். முதியவர் தாக்கப்படுவதை தடுக்க ஒருவர் முயன்றார். ஆனால் அதையும் மீறி குப்புசாமி மீது மகன்கள் தாக்குதல் நடத்தினர். தடுக்க வந்தவரையும் மகன்கள் தாக்கினர்.
அந்த நேரத்தில் ஒரு கம்பால் கணவரை மனைவி தாக்கினார். அப்போது குப்புசாமி, என்னையே அடிக்கிறீயா? என கேட்கிறார்.
இந்த கொடூர தாக்குதலை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்தார். அவரையும் மகன்களில் ஒருவர் வசைபாடி மண் எடுத்து வீசினார்.
இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலுக்குள்ளான குப்புசாமி நெகமம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பொலிஸார் வழக்குப்பதிந்து, 2 மகன்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.