மாடி வீட்டில் அடைக்கப்பட்ட சிறுவன் ஜன்னல் வழியாக கீழே குதித்தான்.. படுகாயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் ….

13ஆம் தேதி பகல் வேளையில் கெசெல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீர் சைப் வீதியில் உள்ள வீடொன்றின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த சிறுவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கெசெல்வத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுவன் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனவும், தற்போது கொழும்பு ரிட்ஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுவன் 2025.04.13 அன்று தனது வீட்டில் இருந்து, தனது வீட்டின் அருகே வசிக்கும் இரு சிறுவர்களுடன் பீர் சைப் வீதியில் உள்ள கடைக்கு வந்தபோது, அந்த கடைக்கு அருகில் இருந்த மூன்று மாடி வீட்டின் இரும்பு கேட்டை தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த வீட்டில் வசிக்கும் நபர், சிறுவனை பலவந்தமாக வீட்டுக்குள் தூக்கிச் சென்று இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளார். அதில் பயந்துபோன சிறுவன் அந்த அறையின் ஜன்னலை திறந்து கீழே குதித்ததால் படுகாயமடைந்ததாக தற்போது மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், இந்த குற்றத்திற்கு உதவியாக இருந்த 59 வயதுடைய கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கெசெல்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.