முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை: பிரதான துப்பாக்கிதாரி தப்பியோடும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

பூஸா சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்துக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பலாங்கொடை, குளிவத்த பிரதேசத்தில் வசிக்கும் விஜேமுனி லலன்த பிரிதிராஜ் குமார என்பவர் ஆவார்.

சந்தேகநபர் இன்று காலை 7.50 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தை நோக்கி செல்வதற்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் கொண்டு வந்த கடவுச்சீட்டு போலியானது எனத் தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர் பாதாள உலகக் கும்பலின் தலைவரான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் பிரதான துப்பாக்கிதாரி ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.