ராமநாதபுரம் கடற்கரையில் கண்டெடுத்த ‘கொகைன்’: சென்னையில் 10 கோடிக்கு விற்க முயன்ற வனக்காப்பாளர் உட்பட 8 பேர் கைது!

ராமநாதபுரம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கிலோ ‘கொகைன்’ போதைப்பொருளை சென்னையில் 10 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற வனக்காப்பாளர் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அமலாக்க – குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை கிண்டி அருகே பரங்கிமலைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான காரை மடக்கி சோதனையிட்டபோது ஒரு கிலோ கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த வனக்காப்பாளர் மகேந்திரன் சிக்கினார். அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் ஏழு பேர் கோயம்பேடு பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் கடற்கரையில் நெகிழிக் கழிவுகளை சேகரித்தபோது பாண்டி மற்றும் பழனீஸ்வரன் ஆகியோருக்கு தலா ஒரு கிலோ கொகைன் உறை கிடைத்ததாகவும், அதன் மதிப்பை அறிந்து விற்க முயன்றதாகவும் மகேந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.