வீட்டு கழிவறை அருகே குழந்தை ஒன்றை பிரசவித்த தாயும் குழந்தையும் மரணம்… பொலிஸ் விசாரணை!

குழந்தை பிறக்க ஆறு நாட்களே இருந்த நிலையில், வீட்டில் கழிவறைக்கு அருகில் குழந்தையை பெற்றெடுத்த தாயும் குழந்தையும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த கசுல் காமில் பாத்திமா உம்மா என்ற இரு பிள்ளைகளின் தாய் ஆவார்.

உயிரிழந்த பெண் வீட்டில் கழிவறைக்கு அருகில் தரையில் குறுக்காக விழுந்து கிடந்ததாகவும், மைத்துனர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது மனைவியின் உடலிலும் தரையிலும் அதிக இரத்தம் இருந்ததாகவும் கணவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் உயிரிழந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை , கால்களுக்கு அருகில் இருந்ததாகவும், தொப்புள் கொடி வெட்டப்படாமல் குழந்தை துணியால் சுற்றப்பட்ட நிலையில் மனைவியையும் குழந்தையையும் முச்சக்கரவண்டியில் பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அந்த வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சடலம் அந்த மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மரணங்கள் தொடர்பில் கொழும்பு மத்திய குற்றவியல் ஆய்வு கூட அதிகாரிகள் மற்றும் கைரேகை திணைக்கள அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்தப் பெண் மற்றும் குழந்தையின் மரணம் தொடர்பில் சம்பவ நேரத்தில் வீட்டில் இருந்த இரு பெண்களிடமும், உயிரிழந்த பெண்ணையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அந்த பெண்ணின் சகோதரனிடமும், முச்சக்கரவண்டி சாரதியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மாளிகாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.பி.எஸ். கல்யாணதுங்கவின் ஆலோசனைப்படி குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் சதுரங்க பிரபாத் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.