சுற்றுலா விசாவில் வந்த இந்தியர்கள் கூலி வேலைகளில் ஈடுபட்ட போது கைது!

குடியேற்ற மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அலுவலகமொன்றை சுற்றிவளைத்து, காலாவதியான விசாக்களின் கீழ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்தியர்களை கைது செய்துள்ளது.
இவர்கள் சுமார் 03 மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாவில் 17 பேரும், குடியிருப்பு விசாவில் 04 பேரும், வணிக விசாவில் ஒருவரும் என இலங்கைக்குள் நுழைந்துள்ளனர்.
குடியேற்ற மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று சந்தேகத்திற்கிடமான இரு இந்தியர்களிடம் திடீரென மேற்கொண்ட விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 25 முதல் 35 வயதுக்குட்பட்ட இந்த இந்தியர்கள் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அலுவலக வளாகமொன்றில் பணியாற்றி வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் குழு வெலிசர தற்காலிக தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.