பிள்ளையான் தனது துயரத்தை கூறி கதறி அழுதார் : பிள்ளையானை சந்தித்த, உதய கம்மன்பில தெரிவிப்பு

90 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சந்தித்துள்ளார்.

கம்மன்பில , தான் பிள்ளையானின் வழக்கறிஞராக செயல்படுவதாக பொலிஸாருக்கு அறிவித்த பின்னரே இந்த சந்திப்புக்கு அனுமதி கிடைத்தள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் முன்னிலையில் சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. அப்போது பிள்ளையான் கண்ணீர் விட்டு கதறி அழுததாக உதய கம்மன்பில வெளியே வந்த பின் தெரிவித்துள்ளார்.

சிறை அறையில் தான் அனுபவிக்கும் கடினமான வாழ்க்கை குறித்து அவர் தன்னிடம் கருத்து தெரிவித்ததாகவும் கம்மன்பில கூறினார்.

இது தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை கூட்டி கருத்து தெரிவிக்கவுள்ளதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கியது தொடர்பான விசாரணைகளுக்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டு , தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் இரகசிய பொலிஸ் காவலில் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.