என்.பி.பி. அரசின் ஏமாற்று வித்தைகளுக்கு இந்தத் தேர்தல் சரியான பாடத்தைப் புகட்டும் – இப்படி முன்னாள் எம்.பி. சுரேஷ் நம்பிக்கை.

“தமிழ் மக்களுக்கோ – சிங்கள மக்களுக்கோ கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் என்.பி.பி. அரசு நிறைவேற்றவில்லை. எனவே, என்.பி.பியின் ஏமாற்று வித்தைகளுக்கு இந்தத் தேர்தல் சரியான பாடத்தைப் புகட்டும் என நம்புகின்றேன்.”
இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரான காலத்திலும் அதேபோன்று நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் என்.பி.பி. என்று சொல்லக்கூடிய ஜே.வி.பி. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கின்றார்களா?
அதேபோன்றே தாம் ஊழலுக்கு எதிரானவர்கள் எனக் கூறியும் நாட்டை நாசமாக்கிய ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக நடவடிக்ககை எடுப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் எடுத்து நடவடிக்கை என்ன?
மேலும் இனவாதம், மதவாதம் இல்லை எனக் கூறிக் கொண்டு ஆட்சிப்பீடத்துக்கு வந்த அநுர தரப்பினர் இப்போது இனவாத, மதவாத ரீதியாகவே செயற்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழ் மக்கள் விடயத்தில் காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம், அரசியல் கைதிகள் விடுதலை எனத் தேர்தலுக்கு முன்னர் கூறியவர்கள் இப்போது ஆட்சிக்கு வந்து 6 மாதங்களுக்குள் செய்தது என்ன?
இவ்வாறான நிலையில்தான் “நாடும் நமதே ஊரும் நமதே” என்று சொல்லிக்கொண்டு அவர்கள் வந்திருக்கின்றனர். இவர்களின் இத்தகைய ஏமாற்று வித்தைகளையும் பித்தலாட்டங்களையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் எத்தனையோ தியாகங்கள், இழப்புக்களுக்கு மத்தியில் கிடைக்கப் பெற்ற அதிகாரங்களை மீளவும் மத்திக்கு வழங்குவது பெரும் ஆபத்து. ஏற்கனவே இழைத்த தவறு போல் இனியும் எமது மக்கள் செய்யக்கூடாது.
எனவே, தமிழ் மக்கள் அந்தத் தவறை உணர்ந்து அநுர தலைமையிலான இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வித்தைகளுக்கு இடமளிக்காது சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியமானது.
ஆகவே, வடக்கு, கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் அல்லது முஸ்லிம் மக்களாக இருக்கலாம் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜே.வி.பியின் வெருட்டல், உருட்டல் எல்லாத்தையும் பார்த்தவர்கள் நாங்கள். ஆகையினால் எதைக் கண்டாலும் எமக்குப் பயம் இல்லை. இந்த என்.பி.பி. யார் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.
அமைச்சர் சந்திரசேகர் அவர்களே உங்களது இந்த மிரட்டல் எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் பலவற்றைப் பார்த்தாவர்கள். இத்தகைய வெருட்டல், உருட்டல்களை அமைச்சர் நிறுத்த வேண்டும்.” – என்றார்.