நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் இருவேறு தீர்ப்புக்கள்.

“உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களில் பிறப்புச்சான்றிதழ் அத்தாட்சிப்படுத்தல் மற்றும் சத்தியக்கடதாசி குறைபாடுகள் என்பவற்றுடன் தொடர்புடைய வகையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இருவேறு தீர்ப்பக்களை வழங்கியிருக்கும் நிலையில், இது சமச்சீரற்ற தேர்தலொன்று நடைபெறுவதற்கான வாய்ப்பைத் தோற்றுவித்திருக்கின்றது. எனவே, இது குறித்து சட்டமா அதிபர் உடனடியாக உயர்நீதிமன்றத்தை நாடி உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் மாந்தை மேற்கு பிரதேச சபையிலே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு மாத்திரம் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டிருந்தது.
அதற்கு எதிராக நாம் உயர்நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தோம். அவ்வாறு மேலும் பலர் எழுத்தாணை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்கள்.
இருப்பினும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிரானதாக இருந்தால் அதற்குரிய எழுத்தாணை மனு உயர்நீதிமன்றத்திலும், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு எதிரானதாக இருந்தால் அதற்குரிய எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களில் மனுதாரர்கள் இரண்டு நீதிமன்றங்களுக்கும் சென்று நிவாரணங்களைப் பெற்றிருக்கின்றார்கள்.
ஆனால், இம்முறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் ஒரு பூர்வாங்க ஆட்சேபனை எழுப்பப்பட்டபோது, இம்மனுக்கள் தெரிவத்தாட்சி அலுவலர்களின் தீர்மானம் தொடர்பானது என்பதால் அது குறித்து ஆராய்வதற்கான நியாயாதிக்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கே இருப்பதாகக் கூறி உயர்நீதிமன்றம் அந்த வழக்குகளை நிராகரித்தது.
அவ்வாறு நிராகரித்தவுடனேயே நாங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் சென்று எமக்கான நிவாரணத்தைப் பெற்றுவிட்டோம். அதன்படி நாம் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கும் போட்டியிடுகின்றோம்.
அதேவேளை மேலும் சிலர் உயர்நீதிமன்றத்திலோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்திலோ எழுத்தாணை மனுக்களைத் தாக்கல் செய்யாமல், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றார்கள்.
அடிப்படை உரிமை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும் உயர்நீதிமன்றம், அந்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.
அதன்படி பிறப்புச்சான்றிதழ் உரியவாறு அத்தாட்சிப்படுத்தப்படாதவர்கள், சத்தியக்கடதாசியில் குறைபாடு உடையவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை சரியானதே என உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது.
இருப்பினும் இதே காரணத்துக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், இக்காரணங்களுக்காக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தவறு எனவும், அந்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே, இந்த விடயத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கும், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கும் இடையே நேரடி முரண்பாடு காணப்படுகின்றது.
இதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு சட்டமா அதிபருக்கு இருக்கின்றது. அவர்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்காகவும், தெரிவத்தாட்சி அலுவலர்களுக்காகவும் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
ஆகவே, சட்டமா அதிபர் இதனை உடனடியாக உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்று சீரமைக்க வேண்டும். ஏனெனில் தற்போது சமச்சீரற்றதொரு முறையிலேயே தேர்தல் நடைபெறக்கூடிய நிலை காணப்படுகின்றது.
ஆகையினால் இந்தக் குழப்பத்துக்கு சட்டமா அதிபர் விரைந்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – என்றார்.