பொய், ஏமாற்று மூலம் மக்களை அச்சுறுத்தி வாக்கு வேட்டை நடத்தும் அநுர அரசு! – சஜித் குற்றச்சாட்டு.

“தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் ஜனாதிபதி அநுர அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றார். எனினும், ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரச நிதியில்லாமல் உகந்த சேவையைப் பெற்றுத் தருவோம்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“எதையும் சரியாகச் செய்யத் தெரியாது, பொய்யும் ஏமாற்றுமே தொடர்ந்து வருகின்றது. அரசும் ஜனாதிபதியும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு மாத்திரமன்றி முழு மக்களுக்கும் சேவையாற்றுவதே ஜனாதிபதியின் பொறுப்பாகும். எனவே, இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்களின் வாக்குப்பலத்தால் வெற்றி பெறச் செய்யுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.” – என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

பொத்துவில் தேர்தல் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“எமது நாட்டு மக்கள் ஜே.வி.பியையும், திசைகாட்டியையும் ஆதரித்து ஆட்சியை வழங்கினர். வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றோம் என்று கூறினர். ஆனால், இன்று இந்த அரசு முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஊழல்வாதிகளை பிடிப்போம் என்றனர். போதுமான எந்த ஏற்பாடுகளும் இதுவரையில் இல்லை.

பொருட்களின் விலைகள் அதிகரித்து வருமானம் குறைந்துள்ள நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் தமது மூன்று வேளை உணவையும் பெற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். வறுமை அதிகரித்து, வருமான மூலங்கள் குறைந்து, வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த அரசு பொய், மோசடிகளைக் கோலோச்சி மக்களை ஏமாற்றி வருகின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.