களைகட்டும் புதுவருடம்: உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் நுவரெலியா!

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு முடிந்ததும், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் பெருமளவில் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
நுவரெலியா நகரசபை எல்லை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அனைத்து அறைகளும் நிரம்பிவிட்டதாக நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நுவரெலியா நகரசபையால் தற்போது நடத்தப்படும் வசந்த உதான கொண்டாட்டத்தில் பங்கேற்கவே இந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்கள் கிரிகோரி ஏரி, விக்டோரியா பூங்கா உள்ளிட்ட நுவரெலியாவின் அழகிய சுற்றுலாத் தலங்களில் பொழுதைக் கழிப்பதைக் காண முடிந்தது.
நுவரெலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நுவரெலியா நகரசபை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், நுவரெலியா தலைமையக பொலிஸார் சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.