‘என்விடியா’வுக்கு புதிய சிக்கல்; $7.3 பில்லியன் இழப்பு?

அதிவேக உயர்ரக சில்லுகளைத் தயாரிக்கும் ‘என்விடியா’வுக்கு (Nvidia) புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் ‘என்விடியா’வின் H20 ரக சில்லுகளைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் 7.3 பில்லியன் வெள்ளி இழப்பை அந்நிறுவனம் எதிர்கொள்ளக்கூடும்.
H20 ரக சில்லுகளைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யத் தனியாக உரிமம் பெற வேண்டும் என்று ‘என்விடியா’ நிறுவனத்திற்கு அமெரிக்க அரசாங்கம் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) உத்தரவிட்டது.
H20 ரக சில்லு தயாரிக்க பல பில்லியன் டாலர் கட்டமைப்புக்கு ‘என்விடியா’ செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கையால் இது அந்நிறுவனத்திற்குப் பெரிய அடியாக அமைந்துள்ளது.
இந்த அறிவிப்புகளால் ‘என்விடியா’வின் பங்குகள் விலை கிட்டத்தட்ட 6 விழுக்காடு சரிந்தது. ‘என்விடியா’வுக்குப் போட்டியாகச் செயல்படும் அட்வான்ஸ்ட் மைக்ரோ டிவைசஸ் (AMD) நிறுவனத்தின் பங்குகளும் சரிந்தன.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்கள் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் சீனா ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவதால் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் செயல்படத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கை ஏமாற்றம் தருவதாக ‘என்விடியா’ தெரிவித்துள்ளது.
சீனாவைக் கட்டுப்படுத்துவதாக எண்ணி அமெரிக்கா அதன் சொந்த நிறுவனங்களுக்குத் தடையாக இருப்பதாக அது கவலை தெரிவித்தது.
சீனாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
சீனாவுக்கு எதிராக வரிவிதிப்பை அமெரிக்க அதிகரித்துள்ளது.
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சீனாவும் வரிவிதிப்பை அதிகரித்துள்ளது.