சீனச் செயலிகளை மொய்க்கும் அமெரிக்க மக்கள்.

மலிவு விலையிலான கைப்பை, யோகாசன ஆடை, பணப்பை போன்றவற்றை வாங்க அமெரிக்கர்கள் சீன மின்வணிகத் தளங்களை மொய்த்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அண்மைய இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பால் உள்ளூர் மின்வணிகத் தளங்கள் விலைகளை உயர்த்திவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுவதே இதற்குக் காரணம்.
டிஎச்கேட் போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதில் அமெரிக்கர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின் ஆப்பிள் ஆப்ஸ்டோர் வழியாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் டிஎச்கேட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டுன்ஹுவாங், அலிபாபா குழுமத்தின் தாவ்பாவ், ஷேன் போன்ற சீனச் செயலிகளும் அமெரிக்காவில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
சீன விநியோகிப்பாளர்களும் உற்பத்தியாளர்களும் டிக்டாக் வழியாக தங்கள் தயாரிப்புகள் குறித்த காணொளிகளைப் பகிர்ந்து வெளிநாட்டவர்களை ஈர்க்க முயல்கின்றனர்.
ஐரோப்பாவின் முன்னணி வணிகச் சின்னக் கைப்பைகளும் ஆடைகளும் சீனாவில்தான் தயாரிக்கப்படுவதாக அக்காணொளிகள் கூறுகின்றன.
அத்துடன், அதுகுறித்த இணையத்தளங்களையும் தொடர்பு விவரங்களையும் அவை பட்டியலிடுவதால், வாடிக்கையாளர்கள் நேரடியாக அந்த வணிகர்களிடம் தங்களது தேவைகள் குறித்த பணிப்புகளை (order) முன்வைக்க முடிகிறது.