தற்காலிகப் பின்னடைவுக்காக நாம் நிரந்தர வெற்றியை இழக்க முடியாது! – பரப்புரைக் கூட்டத்தில் சிறீதரன் தெரிவிப்பு .

தற்காலிகப் பின்னடைவுகளுக்காக நாம் நிரந்தர வெற்றியை இழக்க முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, கரைச்சி பிரதேச சபையின் உதயநகர் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தமிழினப் படுகொலைக்கான நீதியைக் கோரிப் பெற்று, எமது அரசியல் இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள நாம், காலச்சூழலும் – களச்சூழலும் தந்திருக்கும் தற்காலிகப் பின்னடைவுகளைக் காரணம் காட்டி நிரந்தர வெற்றியை இழக்கும் நிலைக்கு வந்துவிடக்கூடாது.

அரசியல் களத்தின் உள்ளும் புறமும் எத்தனை பெரும் சவால்கள் எழுந்தாலும், இலக்கு நோக்கிய எம் பாதையும், பயணமும் அறம் சார்ந்ததாக அமையுமானால் அடைய வேண்டிய அரசியல் உரித்துகளை அடைந்தே தீருவோம்.” – என்றார்.

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவரும் வேட்பாளருமான குணபாலசிங்கம் குணராஜ் தலைமையில் கட்சியின் மூத்த உறுப்பினரும் வேட்பாளருமான கணேசு துரைலிங்கம் உள்ளிட்ட உதயநகர் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளரும் வேட்பாளருமான அருணாசலம் வேழமாலிகிதன், வேட்பாளர்களான சாலினி சாருகன், இராசதுரை ஜெயசுதர்சன், யோகேஸ்வரன் நிரோஜன் மற்றும் கட்சியின் வட்டாரக் கிளை உறுப்பினர் தர்மராசா சிறீதரன் ஆகியோர் உரையாற்றியிருந்ததுடன், வட்டாரக் கிளை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.