பிள்ளையான் ஒரு தேசப்பற்றாளர்! புலிகளைத் தோற்கடிக்க உதவியவர்!! – இப்படிப் போற்றுகின்றார் அவரின் சட்டத்தரணி கம்மன்பில.

“விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான். அவர் தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே அவருக்காக முன்னிலையானேன்.”

இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிள்ளையானுடன் 30 நிமிடங்கள் கலந்துரையாடினேன். சட்டத்தரணி என்ற அடிப்படையில் எனது சேவையாளருடன் இரகசியமாகக் கலந்துரையாடலாம். ஆனால், எமது உரையாடலை நான்கு பொலிஸார் முழுமையாகச் செவிமடுத்துக்கொண்டிருந்தனர்.

பிள்ளையான் கதறி அழுதவாறே என்னிடம் கேள்வி எழுப்பினார்.

‘புலிகள் அமைப்பில் இருந்து விலகி, இராணுவத்துடன் இணைந்து உயிரைக்கூடப் பணயம் வைத்து புலிகளைத் தோற்கடிப்பதற்குப் போராடினேன். நல்லாட்சி காலத்தில் என்னை 5 வருடங்கள் தடுத்து வைத்திருந்தனர். இறுதியில் வழக்குத் தொடுப்பதற்குப் போதுமான சாட்சி இல்லை என்பதால் வழக்கு மீளப்பெறப்பட்டது. தற்போது மீண்டும் தடுப்பில் வைத்துள்ளனர்.

புலிகள் அமைப்பைத் தோற்கடிப்பதற்காக, நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடியதாலா என்னை இப்படி நடத்துகின்றனர்?’ என்று பிள்ளையான் மிகவும் உணர்வுபூர்வமாக என்னிடம் கேள்வி எழுப்பினார்.” – என்றார் கம்மன்பில.

Leave A Reply

Your email address will not be published.