தோல்விப் பயத்தால் எமக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் போலிப் பிரசாரம்!

ிகளுக்குத் தற்போது தோல்விப் பயம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் எமக்கு எதிராகப் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.
யாழ். சாவகச்சேரியில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த தேர்தல்கள் போன்று இம்முறையும் தேசிய மக்கள் சக்திக்கே தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்குவார்கள். குறிப்பாக யாழ். மாநகர சபை உட்பட 17 சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும். அதனால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் பலவும் பயத்தில் கலக்கமடைந்து எம்மைத் தொடர்ந்தும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அதிலும் தாம் தேர்தலில் வெல்லாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதற்குப் போலிப் பிரச்சாரங்களை அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று பலரையும் இணைத்து விடுதலைப்புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். ஆனால், இந்தக் கூட்டமைப்புப் புலிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்திருக்கின்றது.
இவ்வாறான நிலைமையில்தான் எமக்கான ஆதரவை மக்கள் வழங்க முன்வந்துள்ள நிலையில் அதனைக் குழப்ப சதி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும், சதி நடவடிக்கைகள், போலிப் பிரச்சாரங்கள், விமர்சனங்கள் எல்லாம் திட்டமிட்ட வகையில் எமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டாலும் எமது மக்கள் மிகத் தெளிவாக எமக்கான ஆதரவை வழங்குவார்கள்.
இந்தத் தேசிய மக்கள் சக்தியானது தமிழ்க் கட்சியோ, சிங்களக் கட்சியோ, முஸ்லிம் கட்சியோ இல்லை. உண்மையில் இது மனிதநேயம் கொண்ட ஓர் அமைப்பு.
இங்குள்ள கட்சிகள் பலவும் எம்மைப் பார்த்துப் பயப்படுகின்றன. உண்மையில் எமது மக்களைத் திரும்பவும் இவர்கள் ஏமாற்ற முடியாது. இனியும் போலித் தேசியம் கதைத்து மக்களை ஏமாற்ற முடியாது.
புதிய யுகம் படைத்த இந்த மக்கள், தமிழ்க் கட்சிகளுக்குச் சிறந்த பாடம் புகட்டுவார்கள்.
நாம் வழங்கிய வாக்குறுதிகளைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். இதில் மக்களுக்குத் தயக்கம் வேண்டாம். அரசியல் ரீதியில் எம்மைத் தாக்க முடியாதவர்கள் எம்மை விமர்சனம் செய்கின்றார்கள்.” – என்றார்.