தவெக தலைவர் விஜய்-க்கு எதிராக இஸ்லாமிய சமயக் கட்டளை (ஃபத்வா) பிறப்பிக்கப்பட்டுள்ளது

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்-க்கு எதிராக இஸ்லாமிய சமயக் கட்டளை (ஃபத்வா) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவரான மௌலானா ஷாஹாபுத்தீன் ரஸ்வி பரெயில்வி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு எதிராக ஃபத்வா (சமயக் கட்டளை) பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘நடிகர் விஜய் அரசியல் கட்சித் துவங்கிய பின் இஸ்லாமியர்களுடன் நல்லுறவு பேணி வருகிறார். ஆனால், அவரது திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு தவறான கண்ணோட்டத்தில் காட்டப்பட்டனர். மேலும், சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் மது அருந்துபவர்களை அவர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்’ எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், தமிழ் நாட்டின் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் அனைவரும் விஜய்யின் மீது கோவத்திலுள்ளதாகவும், அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இஸ்லாமியர்கள் யாரும் அவருக்கு ஆதரவளிக்கக் கூடாது என தான் ஃபத்வா அறிவிப்பதாகவும் மௌலானா ஷாஹாபுத்தீன் ரஸ்வி கூறியுள்ளார்.

முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.