அரியானாவில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

அரியானாவில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் 46 வயது பெண், பயிற்சிக்காக அண்மையில் குருகிராமிற்கு வந்திருந்தார், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

வெண்டிலேட்டர் சிகிச்சை
ஹோட்டல் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது மூழ்கிய அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆரம்பத்தில் அவர் ஒரு உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ஏப்ரல் 5 ஆம் திகதி, மேதாந்தா என்ற ஒரு பெரிய தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்பெண் அளித்த முறைப்பாட்டின்படி, ஏப்ரல் 6 ஆம் திகதி, வைத்தியசாலையில் அரை மயக்க நிலையில் வென்டிலேட்டர் சிகிச்சையில் தான் வைக்கப்பட்டு, வைத்தியசாலை படுக்கையில் அசையாமல் படுத்திருந்தபோது, வைத்தியசாலையின் ஆண் ஊழியர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதை உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், என்ன நடக்கிறது என்பதை தன்னால் உணர முடிந்தது என்றும் ஆனால் அசையவோ, குரல் எழுப்பவோ முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி , அந்த நேரத்தில் இரண்டு பெண் செவிலியர்கள் அங்கு இருந்ததாகவும், அவர்கள் நடந்ததை தடுக்க எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) அவர் வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பிறகு, தனது கணவரிடம் தனக்கு ஏற்பட்ட துயரத்தை விபரித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.