மன்னார் மாவட்டத்தில் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் வாழ்ந்து சுதந்திரமாக தங்களது தொழில்களை மேற்கொள்ள எமது அரசாங்கம் வசதி செய்து தரும்

மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக இருந்து தங்கள் தொழில்களை மேற்கொள்வதற்கான சகல வசதிகளையும் எங்களது அரசாங்கம் செய்து தரும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் காலை மன்னார் நகரப் பகுதியில் “வெற்றி நமதே ஊர் நமதே “என்னும் தொனிப்பொருளில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
மன்னார் மாவட்டம் கடல் வளம் மிக்க
மிகவும் முக்கியமான ஒரு பிரதேசம். மன்னார் மாவட்டத்தில் அதிகமான மக்கள் கடற் தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய கடல் வளம் எங்களுடைய மீன்கள், எங்களுடைய மக்களுக்கு உரித்தானது.
பேசாலைப் பிரதேசத்தில் மீன் வளங்களை கொள்ளையடித்து சட்ட விரோதமான முறையில் மீன்பிடி படகுகள் மூலமாக கடலுக்கு மிக பெரிய சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். இந்தியப் பிரதமரோடு இது தொடர்பாக நான் நீண்ட நேரம் உரையாடினேன்.
இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அத்தோடு கடலில் நடைபெறுகின்ற அனைத்து சட்டவிரோதமான விடயங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கடற் படையினருக்கு கட்டளையிட்டு இருக்கிறோம்.
எங்களது கடல் வளத்தைப் பாதுகாப்பது படையினரின் மிகப்பெரிய பொறுப்பாகும். அதை நாங்கள் செய்து முடிப்போம் அதேபோன்று இடப்பிரச்சனை, விவசாயம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்போம்.
விவசாயிகளுக்கு பசலை மானியம் பெற்று தருவதோடு நெல் சேகரிக்கும் களஞ்சியமும் ஏற்பாடு செய்வோம்.
உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தருவோம் நீங்கள் வேலை செய்ய தயாராகுங்கள்.
மேலும், மன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்குமிடையில் பாரிய படகு சேவை ஒன்று இருந்தது. அந்த படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நாங்கள் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல இந்த மன்னாரிலே மிகப் பிரமாண்டமான காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற வளம் இருக்கின்றது. கடந்த காலத்திலேயே மக்களுடைய கருத்துக்களை கவனத்தில் கொள்ளாது சுற்றாடலுக்கு தீங்கு இழைக்கும் வகையில் அந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றோம். இருப்பினும் இந்த வளத்திலிருந்து நாம் பிரயோசனம் அடைவதற்கு உங்களுடைய கருத்துக்களைக் கேட்டு சுற்றாடலுடைய பாதிப்பைக் குறைத்து மக்கள் வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வேலை செய்வதற்கு நாம் தயாராக உள்ளோம். நீங்கள் தான் இந்த பிரதேசத்தில் வாழுகின்றீர்கள்.
உங்கள் பிரதேசத்தில் உள்ள பிரச்சனைகள் உங்களுக்குத் தான் தெரியும். எனவே சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்தவிதமான திட்டங்களையும் நாம் முன்னெடுக்க மாட்டோம்.
ஒவ்வொரு திட்டத்தையும் மக்களுடைய ஒத்துழைப்புடன் செயற்படுத்தவே நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
அத்துடன் புத்தளத்துக்கு இடையேயான பாதை மிக நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கிறது அந்தப் பாதை திறக்கப்பட்டால் புத்தளத்துக்கு 98 கிலோ மீட்டர் தான் உள்ளது. அந்தப் பாதை தொடர்பில் சில பிரச்சினைகள் இருக்கிறது. அது தொடர்பில் நாம் கலந்துரையாடி அதற்கு மாற்று வழியுடைய ஒரு புதிய பாதையை புத்தளம் மன்னார் ஊடாக இணைப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். மக்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கவே அரசாங்கம் உள்ளது மக்களை கஷ்டத்துக்கு உட்படுத்த ஒரு அரசாங்கம் தேவையில்லை. எனவேதான் நாம் இம்முறை ஒரு அரசை அமைத்திருக்கிறோம் மக்களுடைய கேள்விகளுக்கு செவி கொடுத்து மக்களுடைய தேவைகளை நிறைவு செய்கின்ற இந்த அரசாங்கம் தான் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்கம் என்று தெரிவித்தார்.
குறித்த மக்கள் சந்திப்பில் வட மாகாண கடற் தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்,செல்லத்தம்பி திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்