பிள்ளையான் பெரும் குற்றவாளி! – கம்மன்பிலவும் தப்ப முடியாது என்று அநுர அரசு தக்க பதிலடி.

“பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மிகப்பெரும் குற்றவாளி. அவரைத் தேசப்பற்றாளர் என்று உதய கம்மன்பில கூறுவது வெட்கக்கேடானது.”
இவ்வாறு அநுர அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 18 ஆண்டுகளின் பின்னர், கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிள்ளையானின் சட்டத்தரணி என்ற ரீதியில் அவரை பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில நேரில் பார்வையிட்டுப் பேசியுள்ளார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, “விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான். அவர் தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே அவருக்காக முன்னிலையானேன்.” – என்று கூறியிருந்தார்.
உதய கம்மன்பிலவின் கூற்றுக்கு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ பதில் வழங்கும்போது, “கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மிகப்பெரும் குற்றவாளி. அவரைத் தேசப்பற்றாளர் என்று உதய கம்மன்பில கூறுவது வெட்கக்கேடானது. பிள்ளையான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் நீதிமன்றம் விசாரணை நடத்தி உரிய தண்டனையை வழங்கும். அதேபோல் உதய கம்மன்பிலவும் நல்லவர் அல்லர். அவரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர். நீதிமன்றங்களில் அவருக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன.” – என்றார்.