சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டு வந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் குமாா் பாடக் கூறியதாவது:
தொடா்ச்சியாக பெறப்பட்ட புகாா்கள் அடிப்படையில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கி வரும் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் ஆய்வகங்கள் குறித்த சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென, மாவட்டத்தின் மூன்று பகுதிகளுக்கு தனித்தனி ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், முறையாக பதிவு செய்யாமல் இயங்கி வந்த 70 மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் அடையாளம் காணப்பட்டு, மூடப்பட்டன. அவற்றை இயக்கி வந்த தகுதியற்ற மருத்துவா்கள் உள்பட 50 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடரும் என்றாா்.