அமெரிக்காவின் விசா ரத்து நடவடிக்கை: இந்திய மாணவர்கள் அதிகளவில் பாதிப்பு.

அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் சர்வதேச மாணவர்களின் விசாக்கள் அண்மைக்காலமாக ரத்து செய்யப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. இந்த நடவடிக்கையால் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அறிக்கையின்படி, இதுவரை 327 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக, 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்திய மாணவர்கள் ஆவர். இந்த விசா ரத்து நடவடிக்கைகளில் தெளிவு இல்லை என்றும், ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் சரியில்லாத காரணங்கள் குறிப்பிடப்படுவதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிகழ்வு, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று இந்தியா டுடே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விசா ரத்து நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களில் 14 சதவீதத்தினர் சீன மாணவர்கள். மேலும், தென் கொரியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இதில் அடங்குவர்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சு மற்றும் சுங்கம் – குடியேற்றத்துறை ஆகியவை வெளிநாட்டு மாணவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுகளுக்காக மாணவர்களின் கடந்த நான்கு மாத கால செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் காரணமாக பல குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபடாத மற்றும் எந்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாத மாணவர்களும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த கல்வியாண்டில் மட்டும் அமெரிக்காவில் விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) திட்டத்தின்கீழ் சுமார் 3.32 லட்சம் மாணவர்கள் இருந்தனர். இவர்களில் ஏறக்குறைய 97,000 மாணவர்கள் (29 சதவீதம்) இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்த OPT திட்டம் வெளிநாட்டு பட்டதாரிகள் அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி பணிபுரிய உதவுகிறது. ஆனால், அமெரிக்க அரசின் அண்மைய சில நடைமுறைகள் காரணமாக சில மாணவர்களால் தங்கள் பணியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான மாணவர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். மாணவர்கள் மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை அல்லது அவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன. இதுவரை மாணவர்கள் மீது பதிவான வழக்குகளில் இரண்டே இரண்டு மட்டுமே அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசா ரத்து நடவடிக்கைகள் இந்திய மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் கல்விச்சூழல் மீதான நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.