அமெரிக்காவில் சிக்கிய பஞ்சாப் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை.

இந்தியாவில் தொடர்ச்சியாக 16 பயங்கரவாத தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பஸ்ஸியா, அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு ஒரு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
29 வயதான ஹர்பிரீத் சிங், பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் பகுதியைச் சேர்ந்தவர். இவர் பஞ்சாப்பில் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) தீவிரமாக தேடப்பட்டு வந்தார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) ஆகியவற்றுடன் ஹர்பிரீத் சிங்கிற்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சண்டிகரில் உள்ள ஒரு வீட்டில் கையெறி குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கிலும் ஹர்பிரீத் சிங் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார். அவரைக் கண்டுபிடித்து தகவல் தருபவர்களுக்கு என்ஐஏ கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற ஹர்பிரீத் சிங்கை தற்போது எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநில காவல் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள ஹர்பிரீத் சிங்குக்கு பஞ்சாப்பில் கையெறி குண்டு வீசி நடத்தப்பட்ட 14 தாக்குதல்கள் உட்பட மொத்தம் 16 பயங்கரவாத தாக்குதல்களில் நேரடி தொடர்பு உள்ளது. அவர் மீது மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 33 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர் தேடப்படும் பயங்கரவாதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தார்,” என்று தெரிவித்தனர்.
மேலும், “ஹர்பிரீத் சிங்குக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் வழக்கில் என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஹர்விந்தர் சிங் சாந்து என்ற ரிண்டா உட்பட நான்கு குற்றவாளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. விசாரணையில், ஹர்பிரீத் சிங் உள்ளூர் நபர்களின் உதவியுடன் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் குற்றவாளிகளுக்கு எடுத்துச் செல்ல உதவியது தெரியவந்துள்ளது,” என்றும் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹர்பிரீத் சிங்கின் கைது இந்தியாவிற்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் வெளிநாடுகளில் தப்பிச் சென்றாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.