அதிகாரங்கள் பகிரப்படவில்லை என்றால் நாட்டை வெளியாருக்குத் தாரை வார்க்க வேண்டும்
அதிகாரங்கள் பகிரப்படவில்லை என்றால்
நாட்டை வெளியாருக்குத் தாரை வார்க்க வேண்டும்
முருகேசு சந்திரகுமார் (தலைவர், சமத்துவக் கட்சி)
புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமாருடன் நடத்தப்பட்ட நேர்காணல் இது. புதிய அரசியற் கட்சிகளின் பயன், சமகால அரசியல் நிலவரம், தமிழ் அரசியற் தரப்புகளின் பொறுப்புகள், சமத்துவக் கட்சியின் எதிர்காலத் திட்டமும் நடவடிக்கைகளும் எனப் பலவற்றைப் பற்றி உரையாடுகிறார் சந்திரகுமார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதிக்குழுக்களின் தலைவராகவும் செயற்பட்ட சந்திரகுமார், ஆயுதப் போராட்டத்தின் வழியாக ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமத்துவக் கட்சி உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் அடுத்த
கட்டச் செயற்பாடுகள் என்னவாக உள்ளன?
கட்சி பதிவு செய்யப்பட்டமையானது ஆதரவாளர்கள் மத்தியிலும் மக்களிடத்திலும் மகிழ்ச்சியையும் புத்தூக்கத்தையும் கொடுத்துள்ளது. எல்லோரும் மிகவும் உற்சாகமடைந்திருக்கின்றனர். பதிவு செய்யப்படாதிருந்த காரணத்தினால் கடந்த தேர்தல்களின்போது நாம் சுயேச்சைக்குழுவாகவே போட்டியிட வேண்டியிருந்தது. பல சுயேட்சைக்குழுக்கள் போட்டியிட்ட சூழலில் எம்மைத் தனித்து அடையாளம் காண்பதில் பலருக்கும் சிரமங்களிருந்தன. இருந்தும் நாம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 20 உறுப்பினர்களைப் பெற்றிருந்தோம். பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில்17000 வாக்குகளைப் பெற்றோம். இப்போது பதிவு செய்யப்பட்ட கட்சியாக நாம் செயற்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. எமக்குரிய சின்னமும் (கேடயம்) பொருத்தமாகக் கிடைத்துள்ளது.
இனிமேல் மேலும் புதிய வேகத்தோடு எமது செயற்பாடுகள் விரிவாக்கப்படும். முதற்கட்டமாக வடக்கிலும் தொடர்ந்து வடக்குக் கிழக்கிலும் எமது செயற்பாட்டுக் களம் அமையும். அடுத்ததாக நாடு தழுவிய ரீதியில் நாம் விரிவடைவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், வழமையான தேர்தல் வணிகத்தை மட்டும் முன்னிறுத்தும் வணிக நிலைப்பட்ட கட்சியாக இல்லாமல், மக்கள் நலனுக்குரிய கட்சியாகச் செயற்படும். இதுவே சமத்துவக் கட்சியின் புதிய பாதையும் அடையாளமுமாக இருக்கும்.
வடக்கு கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு சம்பந்தமாக
விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
கட்சிகள் மட்டுமல்ல, ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தின்போதும் 30 க்கு மேற்பட்ட இயக்கங்கள் இயங்கியதை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். இப்போது புதிய கட்சிகளின் உருவாக்கத்துக்கான காரணங்களையும் பின்னணியையும் நீங்கள் அவதானிக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற – இயங்கிக் கொண்டிருக்கின்ற கட்சிகளின் போதாமை, தலைமைகளின் குறைபாடுகள், கட்சிகளுக்குள்ளிருக்கும் ஜனநாயக நெருக்கடி, செயற்திறனின்மை போன்றவை புதிய கட்சிகளின் உருவாக்கத்துக்கான முதற் காரணங்களாக அமைகின்றன.
இது தமிழ்த்தரப்பில் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம், மலையகத் தரப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சூழலிலும் காணப்படுகின்றது. மிகப் பெரிய பழைய கட்சிகளான ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட தமிழ்ப்பரப்பில் இயங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றின் போதாமைகள் இன்று புதிய கட்சிகளுக்கான வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறது. இதனோடு தமிழரசுக் கட்சியின் போதாமையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். கட்சிகளின் உள்ளடக்கப்போதாமையே பல கட்சிகளின் கூட்டுகளின் அவசியத்தை உருவாக்குகின்றது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், அப்படிப் புதிதாக உருவாகின்ற கட்சிகளும் கூட்டணிகளும் துரதிருஸ்டவசமாக முந்திய கட்சிகளின் அல்லது கூட்டணிகளின் வழித்தடத்திலேயே மோதகம் – கொழுக்கட்டை என்ற மாதிரிப் பயணிக்கின்றன. இதுதான் மக்களுக்கு எரிச்சலூட்டுவதாகவும் சுமையாகவும் மாறுகிறது. இலங்கைத்தீவில் அரசியல் மாற்றம், தீர்வுகள் என எதையும் எட்ட முடியாமலிருப்பதற்கு இவையெல்லாம் காரணங்களாகும்.
உண்மையில் புதிய கட்சி என்பது போதாமைகளை நிறைவு செய்வதற்குரிய கோட்பாட்டு ரீதியான அரசியல் உள்ளடக்கத்தையும் செயற்பாட்டுத்திட்டத்தையும் செயற்திறனையும் கொண்டிருக்க வேண்டும். நல் விளைவுகளை மக்களுக்குத் தெரியக் கூடியவாறு காண்பிக்க வேண்டும். அப்படித்தான் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளும் இருக்க வேண்டும். நாம் இதில் இந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் முழுமையாகக் கவனம் செலுத்துகிறோம்.
இல்லையென்றால், மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகவே அமையும்.
2015இலிருந்து சுயேட்டைக்குழுவாக செயற்பட்டு வரும் தாங்களுக்கு தற்போது
அரசியல் கட்சியென்ற அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் எதிர்காலத்தில்
ஏனைய தமிழ் அல்லது தேசியக் கட்சிகளுடன் கூட்டிணைந்த செயற்பாட்டிற்கு வாய்ப்புள்ளதா?
நாம் எவருக்கும் எதிரிகளல்ல. எனவே எவருடனும் இணைந்து செயற்படத் தயார். ஆனால், அது மக்களுக்கும் நாட்டுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அதவே எங்களுடைய எளிய நிபந்தனை. முதலில் நாம் ஏன் தனித்துச் செயற்பட விளைந்தோம் என்பதற்கான காரணங்களே நாம் இணைந்து செயற்பட வேண்டும் என்பதற்கும் பொருந்தும். ஆகவே கூட்டிணைவு என்பது கொள்கை, நடைமுறை, செயற்பாட்டு உபாயங்கள், அவற்றின் விளைவுகள், அதற்கான பொறுப்பேற்றல், மாற்றங்களை உள்வாங்குதல், மக்கள் மயப்படுதல் , ஜனநாயகத்தை வலுப்படுத்தல் போன்ற பலவற்றை உள்ளடக்கியது.
இதெல்லாம் பொருத்தமாக அமைந்தால், மக்களுக்கு இதன் மூலம் நன்மைகள் கிட்டும் என்றால் நாம் முதல் காலடியைக் கூட்டிணைவுக்காக வைப்போம்.
மத்தியில் உள்ள அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் இந்தச்
சந்தர்ப்பத்தில் தமிழ் தரப்புக்கள் ஒருமித்துச் செயற்பட வேண்டும் என்று
வலியுறுத்தப்படுகின்ற நிலையில் அதில் உங்களின் வகிபாகம் இருக்குமா?
தமிழ்த்தரப்பின் ஒற்றுமை என்பது சிங்களத் தரப்புக்கோ சிங்கள மக்களுக்கோ இலங்கைத்தீவின் ஏனைய சமூகத்தினருக்கோ எதிரானது என்ற கருதுநிலையே வெளியே பொதுவாகக் காணப்படுகிறது. இவ்வாறு நோக்குவது அவர்களின் தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், அப்படி அவர்கள் கருதுமளவுக்கே இதுவரையான தமிழ்க்கூட்டிணைவுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்த மாதிரியான ஒரு தவறான புரிதலை ஏனையோருக்கு அளிக்கும் கூட்டிணைவுகள் பயனற்றவை மட்டுமல்ல, ஆபத்தானவையும் கூட.
ஆகவே இதைக் கவனத்திற் கொண்டு மாற்று அரசியலை, கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில், போருக்குப் பிந்திய சூழலுக்கான அரசியலாக யாரும் முன்னெடுத்தால் அவர்களோடு இணைந்து செயற்படுவதைப்பற்றி ஆலோசிக்க முடியும். இதைப்பற்றி நாங்களும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இதேவேளை தனியே தமிழ்த்தரப்பினால் மட்டும் இலங்கைத் தீவில் அரசியல் மாற்றங்களையோ அரசியல் தீர்வையோ எட்ட முடியாது என்பது வலுவான உண்மையாகும். ஆகவே பொருத்தமான பொறிமுறையுடன் கூடிய அரசியல் சிந்தனையோடிணைந்த அணியாகத் திரள்வதே பொருத்தமானதாகும். இதற்கு நாம் என்றும் ஆதரவே.
தற்போதைய ஆட்சியில் தாங்கள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின்
தலைவராக நியமிக்கப்பட்டிருந்தீர்கள். பின்னர் அப்பதவி மாற்றப்பட்டுள்ள நிலையில்
மத்திய அரசுக்கும் தங்களுக்குமான உறவுநிலை எவ்வாறிருக்கின்றது?
அந்தப் பதவி எம்மை நோக்கி வந்தபோதும் நாம் அதைப் பொறுப்பேற்பதா இல்லையா என்பதை மக்களிடம் கருத்தறிந்தே ஏற்றோம். ஏனென்றால் அதனால் உண்டாகும் சாதக பாதகங்கள் மக்களுக்கே உரியன. ஆகவேதான் நாம் மக்களின் நிலைப்பாட்டை அறிய வேண்டியிருந்தது. மக்கள் விரும்பினார்கள். நாம் அதைப் பொறுப்பேற்றுச் செயற்படுத்தினோம். எமக்குக் கிடைத்திருந்த குறுகிய காலத்தில் நாம் அந்தப் பதவியின் மூலம் பல மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம்.
இப்பொழுது உருவாகியுள்ள சூழல்வேறு. தேர்தலுக்குப்பிறகான நிலவரங்கள் வேறு என்பதால், நாம் இந்தச் சூழலில் எப்படிச் செயற்படுவது என்பதைக் குறித்து ஆலோசித்து வருகிறோம். எமது மக்கள் போரினால் பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்டவர்கள். எமது பிரதேசங்கள் போரினால் அழிவடைந்தது மட்டுமல்ல, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அபிவிருத்தி செய்யப்படாதிருந்தவை. போருக்குப் பிறகே இவையெல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு நாம் கடந்த காலத்தில் மிகப் பெரிய பங்களிப்பைச்செய்திருக்கிறோம். இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். ஆனாலும் இன்னும் நிலைமை சீரடைந்தது என்றில்லை.
இது மிகப் பெரிய வேலை. இதற்கான வேகம் போதாது. அதனால்தான் போர் முடிந்து பதினொரு ஆண்டுகள் கடந்த பிறகும் போர்ப்பாதிப்பிலிருந்து மக்கள் மீள முடியாதிருக்கின்றனர். ஆகவே விரைந்த வேலைத்திட்டமும் கால அவகாசமும் வேண்டும். ஏனைய தரப்புகள் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் பிற தரப்பினரும்) ஏற்கனவே ஆதரவைத் தந்திருந்தால், இணைந்து செயற்பட முன்வந்திருந்தால், மக்களைப் பாதிப்புகளிலிருந்து ஓரளவுக்கு மீட்டிருக்க முடியும். பிரதேசங்களின் வளர்ச்சியையும் குறிப்பிட்டளவு உயர்த்தியிருக்க முடியும். அப்படி நடக்கவில்லை என்பது வேதனைக்குரியதே. இதற்குக் காரணம், மக்கள் நலனையும் விட தங்களுடைய நலனையும் அதற்கான அடையாளத்தையும் பேண வேண்டும் என்ற சிந்தனையில் இவை கட்டுண்டிருந்தே காரணமாகும்.
இப்போதும் நாம் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது, பலமான அரசாங்கமாக இருப்பதால் இந்த ஆட்சியின்போது அரசியல் தீர்வு தொடக்கம் போர்ப்பாதிப்புகளை நிரப்புதல் வரையில் பலவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்பதே. இதற்கான பொறுப்பும் சூழலும் இந்த அரசாங்கத்துக்கு உண்டு என்பதால் இதில் நாம் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறோம். இந்த வகையில் இதற்கு நாம் முழுமையான ஆதரவளிப்போம். இதில் தவறுகள் நிகழ்ந்தால் நாம் மக்களோடு நின்று போராடுவோம்.
13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை மத்திய அரசாங்கப் பிரதிநிதிகள்
வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பில் கரிசனை கொண்டிருக்கின்றீர்களா?
அதுபற்றி மத்திய அரசுடன் அணுகுமுறைகளைச் செய்தீர்களா?
13 ஆவது திருத்தம் என்பது இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு முக்கிய ஏற்பாடு. மாகாணசபை முறைமை என்பது தனியே வடக்குக் கிழக்கு வாழ் மக்களுக்கோ தமிழ் மக்களுக்கு மட்டுமானதோ அல்ல. அது முழு நாட்டுக்குமுரியது. மக்கள் நலனையும் ஜனநாயகத்தையும் விரும்புவோர் நிச்சயமாக 13 ஆவது திருத்தத்தை அங்கீகரிப்பர். அதிகாரப்பரலவாக்கத்தை யார்தான் மறுக்க முடியும்? அப்படி அதை மறுதலித்தால் அதற்குப் பதிலாக – நிகராக வேறு எதை முன்வைக்கப்போகிறீர்கள் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் இனமுரண்பாடு மேலும் கூர்மையடையும். பிளவுண்ட சமூகங்கள் என்ற நிலையே நாட்டில் தொடரும். இது யாருக்கு நன்மையைத் தரும்? நிச்சயமாக இவ்வாறு பிளவுண்ட சமூக நிலை தொடர்ந்தால், நாட்டில் அபிவிருத்தியின் இலக்குகளை எட்டவே முடியாது. இதனை முன்பும் பாராளுமன்றத்திலும் வெளிப்பரப்பிலும் வெளிப்படையாகவே வலியுறுத்திப் பேசியிருக்கிறேன். இவ்வாறு பிளவுண்ட நிலை தொடருமாக இருந்தால், அதனை வெளிச்சக்திகள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி, நாட்டைச் சீரழிக்கும். ஏற்கவே நாடு சீரழிந்தது போதாதா?
நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் விடயம் என்னவென்றால், உள்நாட்டில் ஏனைய தரப்பினருடன் அதிகாரங்களைப் பகிர்ந்து மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதே. இல்லையெனில், நிச்சயமாக பிறத்தியாருக்கு – வெளியாருக்கு – நாட்டையே தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்றாகி விடும்.
ஆகவே நாம் அதிகாரங்களைப் பகிர்ந்து ஒற்றுமையாக மகிழ்ந்திருக்கப்போகிறோமா? பிளவுண்டு, சிதைந்து நாட்டையும் மக்களையும் சிதைக்கப்போகிறோமா? என்று தீர்மானிக்க வேண்டும்.
வேதனை என்னவென்றால் 33 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் பழைய இடத்திற்குப் பின்னுக்கே நிற்கிறோம், நின்று தடுமாறுகிறோம், துக்கப்படுகிறோம், பிரச்சினைகளைச் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான்.
இந்த விடயத்தில் இந்தியா தலையீடுகளைச் செய்ய வேண்டிய தார்மீக கடமையில் இருப்பதாக
ஏனைய தமிழ்த் தரப்புக்கள் கூறுவருகின்ற நிலையில் உங்களின் நிலைப்பாடு என்னவாக
உள்ளது?
இந்தியா எமக்கு ஒரு ஏற்பாட்டைச் செய்து தந்தது. அதற்காக அது பெரிய விலையைக் கூடக் கொடுத்துள்ளது. 13 ஆவது திருத்தமும் மாகாணசபை முறைமையும் வந்து 33 ஆண்டுகளாகின்றன. இதற்குப் பிறகும் நாம் இந்தியாதான் இதை முன்னின்று நடைமுறைப்படுத்த வேண்டும். வலுவூட்ட வேண்டும் என்று கேட்பது கவலைக்குரியது. இந்தியா இதை முன்மொழிந்த போது பின்னின்றவர்களும் மறுத்தவர்களும் இவ்வளவு தாமதமாக வந்து இப்போது மறுபடியும் இதை இந்தியாவிடம் ஒப்படைத்திருப்பது அதை விட வேதனையும் வேடிக்கையுமாகும்.
இந்த நிலையிலும் இனியும் இந்தியா இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் மகிழ்ச்சியே. இந்தியப் பிரதமரும் இதைப்பற்றிப் பேசியதாக அறிகிறோம். இதேவேளை இந்தியா ஒரு எல்லைக்குமேல் இதை அழுத்தி வலியுறுத்தும்போது அது சிங்கள மக்களின் மனதில் வேறுவிதமான உணர்வுகளையே உண்டாக்கும். அது நிச்சயமாக 13 க்கு எதிரான மனநிலையாகவே மாற்றமடையும். அல்லது அப்படி இனவாதச் சக்திகள் மடைமாற்றம் செய்வதற்கு முற்படும். அது மேலும் நெருக்கடிகளையே உண்டாக்கும்.
35 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் விட சிங்களத் தேசியவாதம் மிகக் கூரான முறையில் சிங்கள இனவாதமாகக் கட்டமைந்திருக்கிறது. இதை மேலும் நாம் கூராக்க முடியாது.
ஆகவே இந்தியா தந்த அந்த 13 என்ற நடை வண்டியின் உதவியோடு நாம், நம்முடைய புத்திப் பலத்தினாலும் நடைமுறைத்திறத்தினாலும் சுயமாக நடக்கக் கூடியவாறு எம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 13 ஐ பலமாக்கி வெற்றியடைய வைப்பதும் அதற்கு மேலே செல்வதும் நம்முடைய கையில்தான் பெருமளவுக்கும் உண்டு. இந்தியா அனுசரணை வழங்கலாம்.
இனப்பிரச்சினை தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்கள் பற்றி ஆட்சியில் உள்ள அரசாங்கம்
அக்கறை கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?
பல வகையிலும் நம்பிக்கை வைத்தே மக்கள் இந்த அரசாங்கத்தை இவ்வளவு பலத்தோடு ஆட்சியிலிருத்தியிருக்கிறார்கள். ஆகவே இந்த அரசாங்கத்துக்கு மிகப் பெரிய பொறுப்புகளும் கடமைகளும் உண்டு. மக்களின் நம்பிக்கையைப்போலவே நாம் பல விடயங்களைக் குறித்தும் எதிர்பார்ப்புகளோடிருக்கிறோம்.
பொறுப்புக் கூறல் என்பது தூர நிற்போரையும் சந்தேகங்களோடிருப்போரையும் கிட்ட நெருங்க வைக்கும். நம்பிக்கை கொள்ள வைக்கும். ஆகவே இந்த அரசாங்கம் அதைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். பொறுப்புக் கூறல் சரியாக நடக்கும்போது இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கதவுகள் தானாகவே திறக்கப்படும். அதற்கான சூழல் உருவாகும். ஆனால், இதெல்லாம் நாம் சொல்வதைப்போலவோ எதிர்பார்ப்பதைப்போலவோ இலகுவாகவும் விரைவாகவும் நடந்து விடும் என்றில்லை.
இவற்றை நோக்கி அரசாங்கத்தைச் செயற்பட வைப்பதில் தமிழ்க்கட்சிகள் அனைத்திற்கும் பொறுப்புண்டு. கூடவே பொறுப்புக்கூறும் முன்மாதிரியை தமிழ்த்தரப்பும் முன்னெடுத்துக் காண்பிக்க வேண்டும். தமது தவறுகள், குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்குப் பரிகாரம் காண்பதற்கு முன்வர வேண்டும். அப்படிச் செய்தால் அது அரசாங்கத்துக்கு இலகுவாகவும் இருக்கும். தமிழர் தரப்பு தன்னுடைய தவறுகளையும் குற்றங்களையும் பொறுப்பெடுத்ததைப்போல நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை
முன்னுதாரணமாகக் காட்டிச் செயற்பட முடியும். அதேவேளை மறுவளமாக இது தவிர்க்க முடியாத நெருக்கடியாகவும் இருக்கும். அதாவது தமிழர் தரப்பு பொறுப்புக் கூறியபோதும் அரசு பொறுப்பேற்றலுக்குப் பின்னிற்கிறது என்பதாக. ஆகவே இது இரண்டு பக்கமும் கூருள்ள ஆயுதத்தைப்போலிருக்கும். இதன்மூலம் அரசாங்கமும் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படும்.
இதைப்போல இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம், நடைமுறை, யதார்த்தம் போன்றவற்றைச் சரியாகக் கணிப்பிட்டு தமிழ்த்தரப்பும் செயற்பட வேண்டும். பொறுப்பு என்ற பந்தினை ஒரு பக்கமாக அரசாங்கத்திடம் தள்ளி விட்டு வழமையைப்போல ஒதுங்கி நின்று குற்றம் சாட்ட முற்பட்டால், வழமையையும் விட பெரும் பாதிப்பையே தமிழ்ச்சமூகம் சந்திக்க வேண்டி வரும். கூடவே மலையக, முஸ்லிம் மக்களும்தான்.
இந்த விடயங்கள் பற்றிய சர்வதேச ரீதியாக புதிய அணுகுமுறைகள் அவசியம் என்று
கூறப்படுகின்றமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
சர்வதேச ரீதியான புதிய அணுகுமுறைகள் என்பதும் சிங்கள மக்களை எதிர்தரப்புக்குத் தள்ளும் விதமாக அமையக் கூடாது. நாம் வெளியே செல்லச் செல்ல உள்நாட்டில் நமக்கான இடம் கூடுதலான அளவுக்கு மறுதலிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன? கடந்த தேர்தலில் சிங்களப் பெரும்பான்மை மக்கள் என்ன வகையான நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறார்கள்? கடந்த தேர்தலில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் கூட அவர்களுடைய நிலைப்பாடும் மன நிலையும் என்ன என்று தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது.
நாம் வெளியுலகை நாடிச் செல்லச் செல்ல அவர்கள் தமக்கான அரசை தனியே பலப்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள். அதை தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் செய்கிறார்கள். இதற்கு முன்பு போருக்கு வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவின் மூலமும் இதையே செய்தனர். இதையெல்லாம் நாம் முதலில் கவனத்திற் கொள்ள வேண்டும். சர்வதேச நிலைப்பாடுகளும் ஆதரவு என்பதும் கொழும்பைப் பகைத்துக் கொண்டும் சிங்களச் சமூகத்தைப் புறந்தள்ளிக் கொண்டும் தமிழ் மக்களுக்குச் சார்பாக அமையப்போவதில்லை.
இதேவேளை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததையும் விட சமூகப் பிளவுகளும் இனப்பிளவுகளும் முரண்களும் இன்று அதிகரித்துள்ளன என்பதை யாரால் மறுக்க முடியும்? இலங்கை இந்திய உடன்படிக்கையின் விளைவான மாகாணசபை முறை தமக்கும் உரியது என்பதை எத்தனை வீதமான சிங்கள மக்கள் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்? அது தங்களுக்கு எதிராக இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரமான பூதம் என்றல்லவா அவர்கள் மாகாணசபையைக் கருதிக்கொண்டிருக்கிறர்கள். அப்படித்தான் ஐக்கிய நாடுகள் மன்றத்தையும் அதனுடைய மனித உரிமைகள் பேரவையையும் தங்களுக்கு எதிராகச் சதி செய்யும் அமைப்புகள் என்றே கருதுகிறார்கள். இது அவர்களுடைய தவறான புரிதல் என்று நீங்கள் சொல்லக் கூடும். ஆனால், அரசியல் ரீதியான யதார்த்தம் அப்படித்தான் உள்ளது.
எனவே வெளித்தரப்புடன் புதிய அணுகுமுறைகளைக் கையாள்வது தொடர்பில் நாம் ஆழமான சிந்தனைக்கும் கற்கைக்கும் செல்ல வேண்டும்.
இதேவேளை இன்னொரு முக்கியமான விசயத்தையும் நாம் புரிந்து கொள்வது அவசியமானது. சர்வதேச ரீதியான புதிய அணுகுமுறை என்பது, கற்றுக்கொண்ட பாடங்கள், பொறுப்புக் கூறுதல், பகை மறப்பு, மீளிணக்கம் அல்லது நல்லிணக்கம், பல்லின சமத்துவம், பன்மைத்துவம், ஜனநாயக வலுவாக்கம், சமாதானம் என்றவாறே அமையவேண்டும். இதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதாகவே வலியுறுத்தப்படுகிறது.
இதை அரசும் செய்ய வேண்டும். அரசுக்கு வெளியே உள்ள தமிழ்த்தரப்பு உள்பட அனைத்துத் தரப்பினரும் செய்ய வேண்டும் என்றே சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தல்கள் உள்ளன. இந்த நிலையில் இதற்கு மாறாக – புறத்தியாக வேறு எதைச் செய்யலாம்?
ஆகவே சர்வதேச சமூகம் இலங்கைத்தீவுக்கென வலியுறுத்துகின்ற அரசியல் அடிப்படைகளை மையமாகக் கொண்டு செயற்படுவோரில் நாமே முன்னிலையில் உள்ளோம். அதற்கான புதிய அணுகுமுறைகளைப் பற்றி நாம் கூடுதலாகச் சிந்திக்கிறோம். புதிய அணுகுமுறை என்று கூறுவோரும் வலியுறுத்துவோருமே பழைய பாதையில் நிற்கிறார்கள். தோற்ற மயக்கத்திலிருந்து விடுபட்டு, அவர்கள் முதலில் புதிய பாதையை நோக்கி வரவேண்டும். நாம் எப்போதோ அந்தப் பாதையில் வந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
நேர்காணல் : கருணாகரன்