தில்லியின் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி காவல்துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதுவரை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.

மேலும் 8 முதல் 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு தில்லியில் பலத்த மழை பெய்ததால் கட்டடம் வலுவிழந்து இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தில்லி முதல்வர் ரேகா குப்தா, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் மீட்புப்பணி, காயமடைந்தவர்களுக்கு உதவி என தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணையைத் தொடங்குமாறும் காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.