முக்கிய பிரச்சினைகளை மூடி மறைக்கின்றார் அநுர – சாணக்கியன் குற்றச்சாட்டு

எமது நாட்டின் முக்கிய பிரச்சினைகளை மூடி மறைப்பதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது கவனம் செலுத்துகின்றார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.
பெளத்த மதவாதத்தின் ஊடாக ஜனாதிபதி அரசியல் செய்கின்றார் என்றும் அவர் சாடினார்.
ஏறாவூர் நகர சபையில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டமும் மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே சாணக்கியன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கடந்த ஆட்சியில் மஹிந்த மற்றும் அவரது சகாக்கள் விகாரைகள் மற்றும் புத்த பிக்குகளிடம் சரணடையும்போது, குண்டர்கள் தங்கள் பிழைகளை மறைக்க ஓடி ஒளிக்கும் இடம்தான் இவ்வாறான மதஸ்தானங்கள் என்று தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தார்.
ஆனால், அவர் தற்போது புத்தரின் புனித சின்னங்களைக் காட்சிப்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் முன்னிலை வகிக்கின்றார். ஆனால், எமது நாட்டின் முக்கிய பிரச்சினைகளை மூடி மறைப்பதில் ஜனாதிபதி அநுரகுமார தற்போது கவனம் செலுத்துகின்றார்.” – என்றார்.