பக்கத்து வீட்டுப் பெண் கூறியதால் குப்பையில் போட்ட பை: இளைஞருக்கு நேர்ந்த கதி

பக்கத்து வீட்டுப் பெண், பை ஒன்றை குப்பையில் போடச் சொல்ல, அதன்படி குப்பையில் அந்தப் பையை வீசிய நபரைத் தேடி பொலிசார் வந்த சம்பவம் ஒன்று பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது.
பெங்களூருவில் தன் வீட்டு வாசலில் பொலிசார் வந்து நின்று கதவைத் தட்டியதால் அதிர்ச்சியடைந்தார் இளைஞர் ஒருவர்.
நடந்தது என்னவென்றால், குப்பைத்தொட்டி ஒன்றில் பை ஒன்றிற்குள் பச்சிளங்குழந்தை ஒன்றின் உடல் கிடப்பதைக் கண்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
CCTV காட்சிகள் மூலம் அந்தப் பையை குப்பைத் தொட்டியில் வீசிய நபரைத் தேடிக்கண்டுபிடித்த பொலிசார், அவரது வீட்டுக்கே சென்றுவிட்டார்கள்.
விசாரணையின்போது, பக்கத்து வீட்டு இளம்பெண்ணொருவர் தன்னிடம் ஒரு பையைக் கொடுத்து குப்பையில் போடச் சொன்னதாக தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்.
ஆகவே, பக்கத்து வீட்டுக்குச் சென்ற பொலிசார் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை விசாரிக்க, அவர் அந்தக் குழந்தையின் தாய் என்பது தெரியவந்தது.
அந்த இளம்பெண்ணும் ஒரு இளைஞரும் காதலித்துவந்துள்ளார்கள். அதில் அந்தப் பெண் கர்ப்பமாக, தான் கர்ப்பமானதை வீட்டுக்குத் தெரியாமல் மறைத்துள்ளார் அந்தப் பெண்.
எட்டு மாதங்கள் ஆன நிலையில், திடீரென அந்தப் பெண்ணுக்கு வலி ஏற்படவே, தன் தோழி ஒருவரின் உதவியுடன் குழந்தையை பிரசவித்துள்ளார் அந்தப் பெண்.
ஆனால், பிரசவத்தின்போது அந்தக் குழந்தை இறந்துவிட்டிருக்கிறது.
அந்தக் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி, ஒரு பைக்குள் போட்டு, அதை குப்பையில் போட்டுவிடும்படி பக்கத்துவீட்டுக்காரரிடம் கொடுத்துள்ளார் அந்த இளம்பெண்.
பைக்குள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே பையை குப்பையில் வீசிய இளைஞர் பொலிசாரிடம் சிக்கிக்கொண்டார்.
உண்மை தெரியவந்த நிலையில், அந்த இளைஞரை விடுவித்த பொலிசார், அந்த இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய காதலரை கைது செய்துள்ளார்கள். காரணம், அந்தப் பெண்ணுக்கு வயது 17 மட்டுமே!