ஜம்மு காஷ்மீரில் சோகம்: மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேர் மரணம்

ராம்பன்: ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தரம் குந்த் பகுதியில் மேக வெடிப்பால் நேற்று இரவு முதல் பொழிந்த மழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை மொத்தம் 5 பேர் பலியானதாக தகவல்.
இந்த இயற்கை சீற்றத்தால் 10 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்தன. மேலும், 23 முதல் 30 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்தது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தரம் குந்த் போலீஸார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட காரணத்தால் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
ராம்பன் மாவட்டத்தில் நஷ்ரி முதல் பனிஹால் வரையிலான உள்ள பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரில் இரண்டு பேர் சகோதரர்கள் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். உயிரிழந்த மூவரும் செரி பாக்னா கிராமத்தை சேர்ந்தவர்கள்.
மேகவெடிப்பு காரணமாக அதீத மழை பொழிந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதன் காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களில் ஜம்மு பகுதியில் பதிவான மழை காரணமாக மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். திடீர் வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
ராம்பன் மாவட்டத்தில் மழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், தற்போது நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் பின்னர் சேதங்கள் குறித்து ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரு மார்க்கத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி வாகன இயக்கம் அங்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை தொடரும் காரணத்தால் வாகன ஓட்டிகளுக்கும் இது குறித்து அறிவுறுத்தி உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
250 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் சிக்கித் தவிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பாதிப்பு குறித்து அறியவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் இன்று மாலை அதிகாரிகள் அடங்கிய கூட்டம் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் நடைபெறுகிறது. ராம்பன் மாவட்டம் மட்டுமல்லாது ஜம்மு காஷ்மீரின் இன்னும் பிற மாவட்டங்களில் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.