ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சி.ஐ.டியிடம் சமர்ப்பிப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்தவுடன், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாகவும் புதிய திசையிலும் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி, உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் 6 ஆம் ஆண்டு நிறைவில், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை அரசு உறுதி செய்துள்ளது.

இந்தக் குற்றத்தை கால ஓட்டத்தில் மறைந்து விடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று உத்தரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல்களில் 260 இற் கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.