அமெரிக்க வீதிகளில் எதிரொலிக்கும் எதிர்ப்பு குரல்: டிரம்ப் ஆட்சிக்கு எதிராக மீண்டும் மக்கள் கிளர்ச்சி.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய கொள்கைகளுக்கு எதிராக, நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதிபர் பதவியேற்றதில் இருந்து, டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக இது இரண்டாவது பெரிய மக்கள் திரள் ஆர்ப்பாட்டமாகும்.
முன்னதாக, ஏப்ரல் 5ஆம் தேதி வெள்ளை மாளிகையின் முன் திரண்ட மக்கள், டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சனிக்கிழமை நியூயார்க் நகரின் புகழ்பெற்ற பொது நூலகத்தின் முன் கூடிய மக்கள், “அமெரிக்காவில் மன்னர்கள் இல்லை” (No Kings in America) என்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானவர்களின் கவலை, டிரம்பின் கடுமையான குடிநுழைவுக் கொள்கைகளை சுற்றியே இருந்தது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை நாடு கடத்தும் டிரம்பின் நடவடிக்கைக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“டிரம்ப் ஹிட்லரைப் போல் செயல்படுகிறார்” என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய 73 வயது பெண் கேத்தி வாலி ஆவேசமாக குறிப்பிட்டார். டிரம்பின் முடிவுகளை அவரது சொந்த கட்சியினரே எதிர்க்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்ப் நிர்வாகம் அடிப்படை சட்டங்களை மாற்றியமைப்பதாகவும், குடிநுழைவு, அரசு ஊழியர் குறைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு நெருக்கடி, நீதித்துறை மற்றும் ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் எல்லை மீறுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
50501 என்ற போராட்டக் குழு, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. டிரம்புக்கு எதிராக பல மில்லியன் மக்களை திரட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
ஆர்ப்பாட்டங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதற்கிடையில், அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்கின் டெஸ்லா கார் விற்பனை நிலையங்களுக்கு முன்பும் போராட்டங்கள் நடைபெற்றன. அமெரிக்க அரசு ஊழியர் துறையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டிரம்பின் நடவடிக்கைக்கு மஸ்கின் பங்கு முக்கியமானது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.