புட்டினின் போர் நிறுத்த அறிவிப்பை மீறி உக்ரைனில் தாக்குதல் நீடிக்கிறது: ஸெலன்ஸ்கி கண்டனம்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்த போர் நிறுத்தத்தையும் மீறி, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

புட்டினின் எதிர்பாராத போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, போர் முனை பகுதிகளில் ரஷ்யாவின் பீரங்கி மற்றும் ஏனைய தாக்குதல்கள் தொடர்ந்ததாக ஸெலன்ஸ்கி சுட்டிக்காட்டினார். மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் இந்த போரில், புட்டினின் 30 மணி நேர போர் நிறுத்தம் ஒரு முக்கியமான நகர்வாக பார்க்கப்பட்டாலும், களத்தில் அதன் தாக்கம் இல்லையென தெரிகிறது.

மேலும், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடனேயே தலைநகர் கீவ் உட்பட பல உக்ரைனிய நகரங்களில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை ஒலித்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் தலைமை தளபதியின் அறிக்கையை மேற்கோள் காட்டிய ஸெலன்ஸ்கி, “பல போர் பகுதிகளில் ரஷ்ய படைகள் 59 பீரங்கி தாக்குதல்களையும் ஏனைய தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டன” என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 19ஆம் தேதி நள்ளிரவு வரை கணக்கிடப்பட்ட தகவல்களின்படி, ரஷ்யா 387 தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 19 நேரடி தாக்குதல்களும், 290 ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்களும் அடங்கும் என்றும் ஸெலன்ஸ்கி கவலை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.