கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது மனைவி வாக்குமூலம்

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சொத்துப் பிரச்னைக் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சமையறையில் இருந்த இரண்டு கத்தியால் ஓம் பிரகாஷை அவரது மனைவி பல்லவி குத்திக் கொன்றதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68), பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்களுடன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா்.
ஓம் பிரகாஷ் இறந்து கிடப்பதாக அவரது மனைவி பல்லவி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், படுகாயங்களுடன் வீட்டின் தரைத்தளத்தில் உயிரிழந்து கிடந்த ஓம் பிரகாஷின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்தது என்ன?
பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் மூன்று மாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் ஓம் பிரகாஷ் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு அருந்துவதற்காக ஓம் பிரகாஷும் அவரது மனைவி பல்லவியும் தரைத்தளத்துக்கு வந்துள்ளனர்.
அப்போது, சொத்து விவகாரம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சமையறையில் இருந்த இரண்டு கத்திகளை எடுத்து ஓம் பிரகாஷின் கழுத்து மற்றும் தலையின் பின்புறத்தில் பல்லவி குத்தியுள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே ஓம் பிரகாஷ் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி 112 அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மூத்த அதிகாரிகள், பல்லவியிடம் வாக்குமூலம் பெற்று அவரைக் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, சம்பவத்தின்போது ஓம் பிரகாஷின் மகள் மூன்றாவது மாடியில் இருந்துள்ளார். இருப்பினும், அவருக்கும் கொலைக்கு தொடர்பு இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஓம் பிரகாஷின் மகனுக்கு காவல்துறை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் முறைப்படி புகார் அளித்தவுடன், அதிகாரப்பூர்வ தகவல்களை காவல்துறையினர் வெளியிடவுள்ளனர்.
பல்லவியிடம் காவல்துறை மூத்த அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.