ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவு தர திகாம்பரம் தயார்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலை தோட்ட நிலங்களைப் பிரித்துக் கொடுத்து அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதாகவும், ஜனாதிபதி அவ்வாறு தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை எடுத்தால் தனது முழு ஆதரவையும் ஜனாதிபதிக்கு வழங்குவதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பழனி திகாம்பரம் ஹட்டன் பகுதியில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம், தோட்டப்புற மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் தானும் இதற்கு முன்னர் ஒரு யோசனையை முன்வைத்ததாகவும், அந்த முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அரசாங்கத் தரப்பு தலையிட்டு தோட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்து அந்த முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் நாட்டின் மக்களை மேலும் துன்புறுத்தி வருவதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும், இவ்வாறான சூழ்நிலையில் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹட்டன் நகரில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் கூறுகையில், “தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலைத் தோட்ட நிலங்களைப் பிரித்துக் கொடுப்பதாக தலவாக்கலையில் கூறியிருக்கிறார்கள். இது நாங்கள் 10 வருடங்களுக்கு முன்னர் முன்வைத்த யோசனை. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மட்டும் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் நாடுகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்று வீடுகளைக் கட்டினால் தான் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். கொழும்பு வீடுகளிலும் ஹோட்டல்களிலும் வேலைக்கு தோட்டப்புறக் குழந்தைகள் செல்கிறார்கள் என்று ஜனாதிபதி கூறுகிறார். அதை நிறுத்த ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் ஜனாதிபதி கூறுகிறார். ஜனாதிபதி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் பேசி, பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து நாட்டை ஆளப் பார்க்கிறார்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.