அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், குடும்பத்துடன் நான்கு நாள் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றடைந்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோரும் அவருடன் சென்றுள்ளனர்.

புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜே.டி. வான்சையும், அவரது குடும்பத்தினரையும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் வரவேற்றார்.

ஜே.டி. வான்சின் மகள், இரு மகன்களும் இந்திய பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். இருந்தாலும் ஜே.டி. வான்சும் அவரது மனைவியும் மேற்கத்திய உடையில் இருந்தனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உலகின் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தினார். தற்போது அந்த வரிவிதிப்பு 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் துணை அதிபர் வான்சின் இந்தியப் பயணம் அமைகிறது.

ஜே.டி. வான்ஸ் தனது குடும்பத்தினருடன் டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்‌ஷர்தாம் கோவிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்தார்.

டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடியை மாலையில் சந்திக்கும் ஜே.டி.வான்ஸ், இருதரப்பு வா்த்தகம், வரி, வட்டாரப் பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய விவகாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப்பின் ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் ஜெய்ப்பூர் செல்கிறார். செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

பின்னர் புதன்கிழமையன்று ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு அவர் செல்கிறார். பின்னர், மீண்டும் ஜெய்ப்பூர் செல்லும் ஜே.டி.வான்சும் குடும்பத்தினரும் அங்கிருந்து 24ஆம் தேதி அமெரிக்கா புறப்படவுள்ளதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.