போப் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் இதயச் செயலிழப்பு காரணமாக காலமானதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

88 வயதான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஒரு மாதத்திற்குள் வத்திக்கனில் அவர் தங்கியிருந்த சாண்டா மார்டா இல்லத்தில் காலமானார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு “ஈஸ்டர் வாழ்த்துகள்” தெரிவித்த செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உட்பட உலகத் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
“நாங்கள் ஆதரவற்றவர்களாகிவிட்டோம்,” என்று போப் பிரான்சிஸின் சொந்த நகரமான பியூனஸ் அயர்ஸில் பணியாற்றும் சாலைத் துப்புரவாளரான ஜேவியர் லங்குவெனாரி (வயது 53) தெரிவித்தார்.
வத்திக்கான் வெளியிட்ட மரணச் சான்றிதழின்படி, போப் பிரான்சிஸ் பக்கவாதத்தால் காலமானார். பக்கவாதத்தைத் தொடர்ந்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். அதன் பிறகு அவரது இதயம் மீட்க முடியாத அளவுக்கு செயலிழந்தது.
அவருக்கு முன்பு அறியப்படாத நீரிழிவு நோய் (டைப் 2 டயாபிடிஸ்) இருந்தது என்றும் அந்தச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேவாலய விவகாரங்களை உடனடியாக தனது பொறுப்பில் எடுத்துக்கொண்ட கார்டினல் கெவின் ஃபாரெல், போப்பின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஏப்ரல் 22ஆம் தேதி கார்டினல்கள் ஒன்றுகூடி அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்து திட்டமிட உள்ளனர்.
அவரது மறைவுக்கு நான்கு முதல் ஆறு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 27-க்குள் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.