8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது
ஐபிஎல் தொடரின் 46-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கப்டன் கே.எல் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 57(45) ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் பிஷ்னோய், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் கப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான துவக்கத்தை தந்த இந்த ஜோடியில் கே.எல்.ராகுல் 28(25) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக மந்தீப் சிங்குடன், அதிரடி வீரர் கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் மந்தீப் சிங், கிறிஸ் கெயில் ஆகியோர் தங்களது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி ஆட்டத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கிறிஸ் கெயில் 51(29) ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் சிறப்பாக ஆடிய மந்தீப் சிங் 66(56) ரன்களும், நிகோலஸ் பூரன் 2(3) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பஞ்சாப் அணி 18.5 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. கல்கத்தா அணியின் சார்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.