யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் விரைவில் காணிகள் விடுவிப்பு.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பெருமளவான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும், அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்ககப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகின்றது.

இரண்டு மாவட்டங்களிலுமாகச் சேர்த்து அண்ணளவாக 80 தொடக்கம் 100 ஏக்கர் வரையான காணிகளே விடுவிக்கப்படவுள்ளன. அத்துடன், முன்னதாக விடுவிக்கப்பட்டும், இன்னமும் மக்களின் பாவனைக்குக் கையளிக்கப்படாமல் உள்ள காணிகளை ‘முற்றாணையாக’ விடுவிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றுக்கான பாதைகள் விடுவிக்கப்படாமல் இருந்த சர்ச்சைக்குரிய விடயங்களுக்கும் தீர்வு எட்டப்படும் என்றும் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளை மையப்படுத்தியே இந்த விடுவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பில், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:-

“மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதில் உறுதியுடன் உள்ளோம். படிப்படியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பலாலி விமான நிலையத்துடன் தொடர்புடைய காணிகளைத் தவிர, ஏனைய காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.