“மோடியிடம் போய்ச் சொல்”: பெஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த மனைவி பயங்கரவாதிகள் அனுப்பிய செய்தி.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த மஞ்சுநாத்தின் மனைவி பல்லவி மூலம் பயங்கரவாதிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு செய்தி அனுப்பியுள்ளனர்.

பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது ஆயுததாரிகள் நடத்திய சரமாரி தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். புல்வாமாவுக்குப் பிறகு இது மிகப்பெரிய தாக்குதல். அமெரிக்க துணை அதிபர் இந்தியா வந்திருக்கும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாக்குதலில் கணவனை இழந்த பல்லவி கூறுகையில், நான்கு பயங்கரவாதிகள் தாக்கியதாகவும், கணவரை கொன்றதுபோல் தன்னையும் கொல்லும்படி கூறியதாகவும் தெரிவித்தார். அப்போது ஒரு பயங்கரவாதி, “உன்னை கொல்ல மாட்டேன், நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடம் போய் சொல்” என்று கூறியதாக அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட 26 பேரும் ஆண்கள் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி, தாக்குதல் காரணமாக தனது பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இன்று தில்லி திரும்பினார். வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதி அசைக்க முடியாதது என்றும் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.