ஐதராபாத்தை எளிதில் வீழ்த்தியது மும்பை.

ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சனரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்ச்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி டிரண்ட் போல்டின் துல்லிய பந்து வீச்சில் சிக்கியது. இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஹெட் 0, இஷான் கிஷன் 1, அபிஷேக் சர்மா 8, நிதிஷ் குமார் 2, அன்கிட் வர்மா 12 என அவுட்டாகி 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.
6வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன்-அபினவ் மனோகர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. கிளாசன் அரை சதம் கடந்து 71 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அபினவ் 43 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்களை எடுத்தது. மும்பை அணி சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரியான் ரிக்கல்டன் 11 ஓட்டங்களை பெற்று அவுட்டானார். வில் ஜாக்ஸ் 22 ஓட்டங்களை பெற்று வெளியேறினார்.
தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ஓட்டங்களில் அவுட்டானார். இறுதியில், மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இது மும்பை அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும். ஐதராபாத் அணியின் 6வது தோல்வி இதுவாகும்.