கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்ற பெரும் குற்றவாளிகள்! – அவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறு!

“விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது பெரும் குற்றம் இழைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான முடிவாகும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் பிள்ளையானைத் தொடர்புபடுத்துவதற்கு முற்படுகின்றனர் என வெளியாகும் தகவல் தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைத்திரிபால சிறிசேன கூறியவை வருமாறு,
“அது பற்றி எனக்கு எதுவும் கூற முடியாது. விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டியினர் மற்றும் புலனாய்வு ப் பிரிவுக்கே அது பற்றி தெரிந்திருக்ககூடும். எனக்கு இது பற்றி தகவல்கள் தெரியவரவில்லை.
பிள்ளையான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர். அவ்வமைப்பில் இருந்து அவர் வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்தபோது நான் அமைச்சுப் பதவி வழங்கவில்லை. அப்படிபட்ட ஒருவருக்கு எப்படி பதவி வழங்கப்பட்டது என வழங்கியவரிடம் கேளுங்கள்.
அவ்வாறு பதவி வழங்கப்பட்டமை தவறாகும். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி கருணாவும், பிள்ளையானும் இராணுவத்துடன் இணைந்தனர். போரை முடிப்பதற்கு இது உதவியாக அமைந்திருக்கக்கூடும்.
அம்பாறையில் பிக்குகளைக் கொலை செய்தது யார்? இது அனைவருக்கும் தெரியும். எனவே, நபர்கள் யார் என்ற தகவலை எனது வாயில் இருந்து எடுக்க முற்படவேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்று குற்றம் இழைத்தனர்.” – என்றார்.