பாடசாலைகளுக்கு விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் ஏனைய பொருட்களை சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் மற்றும் திரும்பப் பெறும் மையங்களாகவும், தேர்தல் முடிவுகளை எண்ணும் மையங்களாகவும் பயன்படுத்தப்படும் பாடசாலைக் கட்டிடங்கள், கல்வி பீடங்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலூவேவ கையொப்பமிட்ட கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் 2025.04.19 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளவாறு நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் 2025 மே 05 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் எனவும், 2025 மே 07 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 2025 மே 04 ஆம் திகதி சம்பந்தப்பட்ட கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். வாக்குச் சாவடி நடவடிக்கைகளுக்குத் தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை வழங்குவதற்கு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அதிபர்களும் அறிவுறுத்தப்பட வேண்டும்.

அதன்படி, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு இணங்க, வாக்குப் பெட்டிகள் மற்றும் ஏனைய பொருட்களை சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கும் மற்றும் திரும்பப் பெறும் மையங்களாக பயன்படுத்தப்படும் இணைப்பு 01 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்தந்தப் பாடசாலைகளுக்குரிய காலப்பகுதியில் மட்டும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கவும், பாடசாலை நேரத்திற்குப் பின்னர் கோரப்பட்டுள்ள பாடசாலைகளை அந்தந்த தினத்தில் பாடசாலை முடிந்தவுடன் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கவும் வேண்டும் என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.