வாக்குச்சீட்டு முறைகேடு: தபால் ஊழியரும், சர்வ சன பலய கட்சியின் வேட்பாளரும் கைது!

அதிகாரப்பூர்வ வாக்காள அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணியை தனது நெருங்கிய வேட்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு, அந்த அட்டைகளை அவரிடம் கொடுத்துவிட்டு தபால் ஊழியர் வீடு சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, புத்தளம் பொலிஸார் இன்று (24) தபால் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அந்த வாக்காள அடையாள அட்டைகளை வைத்திருந்த புத்தளம் உள்ளுராட்சி சபையின் சர்வ சன பலய கட்சியின் வேட்பாளர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 86 அதிகாரப்பூர்வ வாக்காள அடையாள அட்டைகளை புத்தளம் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் பின்வருமாறு பதிவாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வாக்காள அடையாள அட்டைகள் சிலவற்றை வைத்திருந்த புத்தளம் உள்ளுராட்சி சபையின் சர்வசன பலய வேட்பாளர் ஒருவர் குறித்து புத்தளம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பொலிஸார் சென்று அவரது வீட்டை சோதனையிட்டபோது, 86 அதிகாரப்பூர்வ வாக்காள அடையாள அட்டைகள் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வாக்காள அடையாள அட்டைகள் அவருக்கு எப்படி கிடைத்தன என்று விசாரித்தபோது, இந்த வாக்காள அடையாள அட்டைகளை வீடு வீடாக சென்று விநியோகிப்பதற்காக தபால் ஊழியரிடம் தான் கேட்டதாக அவர் கூறினார். இது தொடர்பாக இன்று காலை தபால் ஊழியர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, தனக்கு தெரிந்த மற்றும் நம்பிக்கையான இந்த நபருக்கு, அந்த வாக்காள அடையாள அட்டைகளை பாதுகாப்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விநியோகிப்பதாக உறுதியளித்ததன் பேரில் ஒரு பகுதியை கொடுத்ததாக தபால் ஊழியர் கூறினார்.
தனது கடமையை பாரதூரமாக மீறியதற்காக தபால் ஊழியரும், சட்டவிரோதமாக மற்றவர்களின் அதிகாரப்பூர்வ வாக்காள அடையாள அட்டைகளை வைத்திருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முயன்ற உள்ளுராட்சி வேட்பாளரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.