ஜே.வி.பியினரே உண்மையான இனவாதிகள்! – கஜேந்திரகுமார் எம்.பி. விளாசல்.

“இனவாதம் இல்லை, இனவாதம் இல்லை என உதட்டளவில் மேடைகளில் கூறிக் கொண்டாலும் இனவாதத்தை ஜே.வி.பியினரே வெளிப்படுத்துகின்றனர் அவர்களே உண்மையான இனவாதிகள்.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ். கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
“இலங்கையின் தெற்கில் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கிலும் தாங்கள்தான் பெரிய கட்சி என்றும், தமக்கே தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்றும் ஜே.வி.பியினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர்.
உண்மையில் வடக்கு, கிழக்கிலுள்ள 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8 பேரே ஜே.வி.பியினர். ஏனையவர்களில் தமிழரசுக் கட்சி 8, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 1, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1, சுயேச்சைக் குழு 1 என்றவாறாகவே ஆசனங்கள் உள்ளன.
இவ்வாறிருக்கையில் எதனடிப்படையில் தாம்தான் பெரிய கட்சி என்றும், தமக்கே மக்கள் ஆணை வழங்கி உள்ளனர் என்றும் ஜே.வி.பியினர் கூறுகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.
இதனை உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் கூடத் தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்தப் பொய்ப் பிரச்சாரத்தையும் ஜே.வி.பியின் ஏமாற்றுத்தனங்களையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டோடு அவர்கள் இப்போது இல்லை எனவும் கூறி வருகின்றனர். அவர்களுக்குச் சமஷ்டியோ, சுயாட்சியோ அவசியமில்லை என்றும், அவர்களைச் சமத்துவமாகக் கருதினால் இலங்கையர் என்ற அடையாளத்துடன் அவர்கள் வாழ்வார்கள் என்றவாறாகப் பேசி வருகின்றனர்.
அதேபோன்று கடந்த காலங்களில் ஆட்சி செய்த கட்சிகள் ஊழல் நிறைந்த இனவாதத்துடன் செயற்பட்டதாலே தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியவில்லை. ஆனால், நாம் ஊழல், இனவாதம் இல்லாத ஒரு கட்சியாகவே செயற்பட்டு வருவதால் எமக்கு தமிழ் மக்களும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இப்படி இன, மத பாகுபாடு பார்க்காதவர்கள் என்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை இன்னமும் ஏன் நிறைவேற்றவில்லை. தாம் வழங்கிய வாககுறுதிகளை தாமே நிறைவேற்றத் தெரியாதவர்களாம்.
உண்மையில் இன, மத வேறுபாடு பார்க்காதவர்கள் என்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிதியைக் கொடுப்பதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? அரசு என்றவுடன் மக்களை அச்சுறுத்தி மிரட்டல் விடுவதா இவர்களது அரசியல் மாற்றம் எனக் கேட்கின்றோம்.
என்.பி.பி. என்று சொல்லுகின்ற ஜே.வி.பியின் கதைகள், பேச்சுக்கள், செயற்பாடுகள் எல்லாமே ஏமாற்று வித்தைகள்தான்.
தாங்கள் இனவாதம் இல்லை என்றும், இனவாதம் பேசுவதற்கு இடமில்லை எனவும் கூறுகின்ற இந்த ஜே.வி.பியினர்தான் முற்றுமுழுதான இனவாதிகள். இவர்கள் பெயரளவிலே இனவாதமில்லை எனச் சொல்லிக்கொண்டு இருந்தாலும் எல்லாவற்றிலும் இனவாதம் கொண்டவர்கள் இந்த ஜே.வி.பியினர்தான்.
சின்னச்சின்ன விடயங்களுக்குக் கூட தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் தான் இனவாதத்தைத் தூண்டுவதாகச் சொல்லும் இவர்கள் தமிழ் மக்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு ஏன் தீர்வை வழங்க முடியாமல் இருக்கின்றனர்.
ஒரு பக்கம் நீங்கள்தான் பெரிய கட்சி என்றால் தையிட்டி விகாரை போன்ற இனவாதமில்லாத சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு இனவாதம் இல்லாமல் தீர்வை வழங்கலாமே. ஏன் இவர்களால் முடியவில்லை. ஆகவே, உங்களிடம் இனவாதம் இல்லை என்றால் முதலில் தையிட்டி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொடுக்க நீங்கள் தயாரா எனச் சவால் விடுக்கின்றோம்.
ஆக மொத்தத்தில் தமிழ் மக்களின் ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்க்க முடியவில்லை என்பதால் இந்தப் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்து இனவாதம் என்று பெயரைச் சூட்டிக்கொண்டு தட்டிக் கழித்துவிட்டு கடந்து செல்லப் பார்க்கின்றனர்.
உண்மையில் இனவாதம் என்றால் சட்டவிரோத நடவடிக்கைக்கு நடவடிக்கை எடுக்காமல் அதனை முடக்குவதுதான் இனவாதம். இவ்வாறாக தமிழ் மக்களின் ஒவ்வொரு விடயத்துக்கும் குறிப்பாக தாமே வழங்கிய வாக்குறுதிகள் உட்பட அனைத்தையும் தட்டிக்கழித்து கடந்து செல்லவே முயற்சிக்கின்றனர்.
இனவாதம் இல்லை, இனவாதம் இல்லை என உதட்டளவில் மேடைகளில் கூறிக் கொண்டாலும் இனவாதத்தை ஜே.வி.பியினரே வெளிப்படுத்துகின்றனர் அவர்களே உண்மையான இனவாதிகள்.
இத்தகைய பௌத்த சிங்கள பேரினவாதிகளுக்கு இந்தத் தேர்தலில் சந்தர்ப்பத்தை வழங்கினால் அது தமிழ் மக்களுக்கே பாரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே,தமிழ் மக்கள் விழிப்புடன் இருந்து
தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற எங்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கொடூரமானவர், இனவாதி என்பதெல்லாம் தமிழ் மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவரைப் பற்றி அறிந்துகொள்வதற்கு சிங்கள மக்களுக்கு இரண்டு வருடங்கள் எடுத்திருந்தன.
ஆனால், பல்வேறு கதைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தான் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியாதவராக தன்னுடையதும் தமது கட்சியினதும் உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகின்றார். ஆக அநுரவைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள ஆறு மாதங்கள் எடுத்துள்ளது.
எனவே, உண்மையான முகத்தை இப்பவேனும் அறிந்துகொண்டுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் நிதானமாகச் சிந்தித்து எதிர்காலத்தில் உங்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.” – என்றார்.